பாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்

பாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்
பாஜக எம்.பி வீட்டில் குண்டு வீச்சு - மர்ம நபர்கள் தப்பியோட்டம்

பாஜக மாநிலங்களவை எம்.பி முரளிதரன் இல்லத்தில் மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். 

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து பிந்து, கனகதுர்கா என்ற 2 பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் சபரிமலைக் கோயிலுக்கு நுழைந்து சாமி தரினம் செய்ததைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதில் கண்ணூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மேலும் ஒரு இலங்கை பெண் தரிசனம் செய்ததையடுத்து கேரளாவில் வன்முறை வெடித்து வருகிறது. இதுவரை 1700 பேர் பல்வேறு இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

பெண்கள் கோயிலுக்குள் நுழைய கேரள ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதையடுத்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ சம்ஷீ வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று பாஜக மாநிலங்களவை எம்.பி முரளிதரன் இல்லத்தில் மர்மநபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து பாஜக எம்.பி. முரளிதரன் கூறுகையில், தாக்குதல் நடத்தப்பட்ட போது, வீட்டில் என் சகோதரி, மருமகன், சகோதரியின் மகள் ஆகியோர் இருந்ததாகவும் ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படும்  விவகாரத்தில் மாவோயிஸ்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும் எனவே தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com