சாமியார் அசராம் பாபு வழக்கு - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
சாமியார் அசராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கில் குஜராத் அரசு மந்தமாக நடந்துகொள்வதாக உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்தவர் அசராம் பாபு. இவரும் இவருடைய மகன் நாராயணனும் ஆசிரமத்தில் தங்கியிருந்த குஜராத் சகோதரிகள் இருவர் மற்றும் 16 வயது உத்தரபிரதேச சிறுமி ஆகியோரை கற்பழித்ததாக கூறி கடந்த 2013-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சாமியார் அசராம் பாபு தன்னை ஜாமீனில் விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் செய்தார். ஏற்கனவே அவர் இதுபோல் தாக்கல் செய்த பல மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில் இந்த மனு மீது விசாரணை நேற்று நடந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அமிதவராய் அடங்கிய அமர்வு குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் சரமாரியாக கேள்விகளையும் எழுப்பியது.
“இந்த வழக்கில், மாநில அரசு மிகவும் மந்தமாக நடந்துகொண்டு வருகிறது. விசாரணையை துரிதமாக நடத்தவேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதமே நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் விசாரணை மெதுவாக உள்ளது. கற்பழிப்புக்கு உள்ளான பெண்ணிடம் குஜராத் போலீசார் இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் குஜராத் அரசுக்காக ஆஜராகி இருந்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்தானே இந்த வழக்கில் முக்கிய ஆதாரம்?... என்றும் கேட்டனர்.
இதனிடையே அசராம் பாபுவின் வழக்கறிஞர் “எங்கள் கட்சிக்காரருக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பதை எங்களால் நிரூபிக்க முடியும். அதன்பிறகே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் வாக்குமூலத்தை பெறவேண்டும். தவிர, அதுவரை எங்களால் ஜாமீன் கோர முடியும்” என்றனர்.
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் அமர்வு, “இந்த வழக்கில் விசாரணை எந்த கட்டத்தில் இருக்கிறது? என்பதை குஜராத் மாநில அரசு அடுத்தகட்ட விசாரணையின்போது பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு ஜாமீன் மனு மீதான விசாரணை அக்டோபர் 18-ந்தேதி பிறகு நடைபெறும்” என்று தெரிவித்தனர்.