சாமியார் ராம் ரஹீம் குற்றவாளி: பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை வெடித்தது
பெண் பக்தர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையொட்டி பஞ்சாப், ஹரியானாவில் வன்முறை வெடித்துள்ளது.
தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு தங்கியிருந்த பெண் பக்தர்களை, அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் தொந்தரவு செய்தததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, ராம் ரஹீம் சிங் மீது கடந்த 2002 ஆம் ஆண்டு பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆன்மிகவாதி, நடிகர், தொழிலதிபர் என பன்முகங்கள் கொண்ட குர்மீத் ராம் ரஹீம் சிங்-க்கு உலகெங்கும் சுமார் 6 கோடி பக்தர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், அதனையொட்டி சண்டிகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இருப்பினும் ராம் ரஹீம் நீதிமன்றம் வந்தபோது ஆதரவாளர்கள் 100 கார்களில் அங்கு குவிந்திருந்தனர். வன்முறைகள் பரவுவதைத் தடுக்க இணையதள சேவைகளும் அங்கு தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என அறிவித்தது. மேலும், குர்மீத் ராம் ரஹீமிற்கு தண்டனை விவரம் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ராம் ரஹீம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதையொட்டி பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. ஹரியானாவில் நடைபெற்று வரும் வன்முறையில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் மாலவுட் ரயில் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டிருக்கிறது. இதனால் இரு மாநிலங்களிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருமாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.