இந்தியா
இந்தியாfb

இந்தியாவை விட்டு செல்ல மாட்டேன்.... ரஷ்யப் பெண்ணின் உருக்கமான வீடியோ!

இந்தியாவை விட்டு செல்லமாட்டேன் என்று இந்தியாவில் வசிக்கும் ரஷ்யப்பெண் ஒருவர் உருக்கமாக பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
Published on

ரஷ்யாவைச் சேர்ந்தவர் போலினா அக்ரவால். இவர் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில்தான் தங்கியுள்ளார். தற்போது உத்தராகண்ட் மாநிலம் குர்கானில் வசித்து வருகிறார். இந்நிலையில்தான், பாகிஸ்தானுடனான எல்லைப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியையும், ராணுவ வீரர்கள் குறித்தும் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடவே, அந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் பெற்று, 1, 22, 000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்று தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் அவர் பேசியது என்ன?

” இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்களாக சண்டை நடந்தபோது, ரஷ்யாவிலுள்ள எனது பாட்டி ரஷ்யாவுக்கு, தாய்நாட்டுக்கு வந்துவிடுமாறு கூறினார். எது எனது தாய்வீடு ? இதுதான் என்னுடைய வீடு. நான் இங்குதான் இருப்பேன் என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன்.

இந்திய ராணுவ வீரர்கள் இரவு பகலாக எல்லையில் காத்து நிற்கின்றனர். தேசத்துக்காக தங்களது உயிரை அர்ப்பணித்த ராணுவ வீரர்களுக்கு எனது வணக்கம். அவர்கள் எல்லையில் இரவு, பகலாக காவல் காப்பதால்தான், நாட்டு மக்கள் இங்கு இரவு நேரத்தில் நிம்மதியாக உறங்கமுடிகிறது.

ரஷ்ய நாடு கொடுத்த மிகவும் நவீனமான ஆயுதங்கள், ராணுவப் பாதுகாப்புச் சாதனங்களை இந்தியா வைத்துள்ளது. எதிரி நாட்டிலிருந்து பறந்து வரும் ட்ரோன்கள், ஜெட் விமானங்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட எதையும் சமாளிக்கும் திறனை ராணுவம் பெற்றுள்ளது.

பதற்றம் ஏற்பட்டபோது இந்திய ராணுவம் தயாராக இருந்ததைப் பாராட்டவேண்டும். சுயநலமில்லாமல் நாட்டுக்காகப் போரிடும் ராணுவ வீரர்களை நாம் பாராட்டவேண்டும். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் துணிச்சலான முடிவெடுத்த பிரதமர் மோடியையும் பாராட்டுகிறேன் “ என்று பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com