''பாதிக்கும் மேலான இந்தியர்கள் இந்தி மொழி பேசுவதில்லை; ஆனாலும்..'' - இந்திய பயணம் குறித்து புதின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக கடந்த 4-ஆம் தேதி இந்தியா வந்திருந்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதித்திருந்தார். அதனால் புதினின் இந்திய வருகை பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது .
இந்தியா வந்த அதிபர் புதினுக்கு இந்திய அரசு சார்பில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில், விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் புதினை வரவேற்று ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத்கீதை புத்தகத்தை பரிசளித்திருந்தார். பின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உக்ரைன் - ரஷ்யா போர் குறித்தும் , அணுமின் உற்பத்தி, மருத்துவம், விவசயம் போன்ற துறைகளில் இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இரண்டு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ரஷ்யா திரும்பிய புதின் இந்தியா பயணம் குறித்து பேசியிருக்கிறார்.
அதில், நான் சமீபத்தில் இந்தியா சென்றிருந்தேன். அங்கு 1.5 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே இந்தி மொழி பேசுகிறார்கள். ஒருவேளை 500-600 மில்லியன் மக்கள் அம்மொழியை பேசலாம். மீதம் உள்ள மக்களின் வெவ்வேறு மொழியை பேசுகிறார்கள். சில சமயங்களில் ஒருவர் பேசுவது மற்றொருவருக்கு புரிவதில்லை. ஆனாலும் பன்முகத்தன்மை இருந்தாலும் அவர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். இந்தியா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய நாடுகளில் நாகரிகத்தின் வளர்ச்சியில் எங்கேயோ இருக்கிறது. நாம் பன்முகத்தன்மைக்கு மத்தியிலும் ஒற்றுமையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என பேசியிருக்கிறார்.
ராஜ்குமார் .ர
