மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்
இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக, விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய சுதந்திர தின உரையில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு இந்தியாவிலிருந்து மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் 2022ஆம் ஆண்டுக்குள் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார். அதற்காக 10ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டத்தின்படி 3 வீரர்களை சுமந்து செல்லும் விண்கலமானது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 400 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும். அதில் அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் மூவரும் 7 நாட்கள் வரை அங்கிருந்து ஆய்வுகளை மேற்கொள்வர். அதற்கான பணிகளை இஸ்ரோவும் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதில் ரஷ்யாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விண்வெளி வீரர்களை தேர்ந்தெடுப்பது, மருத்துவ சோதனை செய்வது மற்றும் விண்வெளிக்கு செல்வதற்கான பயிற்சிகளை அளிப்பது ஆகிய மூன்று பணிகளை ரஷ்யா மேற்கொள்ளும். வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர், அவர்களுக்கு முதல் இரண்டு பயிற்சிகள் இந்திய விமானப்படையின் கீழ் இயங்கும் விண்வெளி மருத்துவ கழகத்தில் வழங்கப்படும். இறுதி பயிற்சிக்கு வீரர்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்படுவர். விண்வெளி தொழில்நுட்பத்தை பொறுத்தவரை, ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால உறவு உள்ளது. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மா, 1984ஆம் ஆண்டு ரஷ்யாவின் சோயுஷ் டி 11 விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.