‘ரூ 88,000 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் மாயம்’ ஆர்.டி.ஐ.யில் அதிர்ச்சி தகவல்!

புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
500 ரூபாய், ரிசர்வ் பேங்க்
500 ரூபாய், ரிசர்வ் பேங்க்file image

இந்திய ரிசர்வ் வங்கியிடம் 500 ரூபாய் நோட்டுகளின் நிலை குறித்து மனோரஞ்சன் ராய் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விவரம் கேட்டுள்ளார்.

அதில் "புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாயின் 8,810.65 மில்லியன் பணத்தாள்கள் மூன்று இந்திய நாணய அச்சகங்களால் வெளியிடப்பட்டுள்ளது" என்பது தெரியவந்துள்ளது.

[3 அச்சகங்கள் - பெங்களூருவில் உள்ள பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட், நாசிக்கில் உள்ள கரன்சி நோட் பிரஸ் மற்றும் தேவாஸில் உள்ள வங்கி நோட்டு அச்சகம்]

இதில் முரண் என்னவெனில், இந்த மூன்று அச்சகங்களால் மேற்கண்ட 8,810.65 மில்லியன் பணத்தாள்கள் வெளியிடப்பட்டதாகவும், அதில் இந்திய ரிசர்வ் வங்கி 7,260 மில்லியன் பணத்தாள்களை மட்டுமே பெற்றிருப்பதாகவும் ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, 1,550 (8,810 - 7,260 = 1,550) மில்லியன் பணத்தாள்கள் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தத் தொகையுடன் நாசிக் அச்சகம், 2015 ஏப்ரல் - 2016 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் ரிசர்வ் வங்கியிடம் வழங்கிய, 210 மில்லியன் பணத்தாள்களும் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.

மொத்தத்தில், 1,760 மில்லியன் (1,550 + 210 = 1,760) ரூ.500 மதிப்பிலான பணத்தாள்கள் காணாமல் போயிருப்பதாக, அதாவது ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அப்படிப்பார்த்தால், மொத்தம் ரூபாய் மதிப்பில் மொத்த 88,032.5 கோடி ரூபாய் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக, ‘2015 ஏப்ரல் - 2016 டிசம்பர் காலகட்டத்தில் 375.450 மில்லியன் புதிய வடிவிலான 500 ரூபாய் பணத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன’ என நாசிக் அச்சகம் தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆனால், இதே 2015 ஏப்ரல் - 2016 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், தாம் 345 மில்லியன் பணத் தாள்களை மட்டுமே பெற்றிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மற்றொரு ஆர்டிஐ கேள்விக்கான பதிலில், 2015 ஏப்ரல் - 2016 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், அதாவது ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சமயத்தில், 210 மில்லியன் 500 ரூபாய் பணத்தாள்களை ரிசர்வ் வங்கிக்கு வழங்கியுள்ளோம் என்று நாசிக் தெரிவித்துள்ளது. (இந்தத் தொகைதான் மேற்சொன்ன 1,550 மில்லியன் பணத்தாள்களை சேர்த்து, மொத்தம் 1,760 மில்லியன் பணத்தாள்கள் என கூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).

இப்படியாக, அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளுக்கும், அதில் இந்திய ரிசர்வ் வங்கியால் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியிடம் கேள்விகள் எழுப்பப்பட்டும், இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.

RBI logo
RBI logoPTI

இதை, தன் இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மனோரஞ்சன் ராய், ”இவ்வளவு பெரிய தொகையிலான நோட்டுகள் காணாமல் போனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்” எனக்குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய பொருளாதார புலனாய்வுப் பிரிவு மற்றும் அமலாக்கத் துறைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com