'தகவலை கேட்டதற்கு பதிலாக ஆணுறை' அதிர்ச்சியடைந்த கிராமத்தினர்
ராஜஸ்தானில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிராம வளர்ச்சிப் பணிகள் குறித்த விவரம் கேட்ட இருவருக்கு ஆணுறை அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் பத்ரா பகுதியைச் சேர்ந்தவர்கள் விகாஸ் சவுத்ரி மற்றும் மனோகர் லால். இருவர் தங்கள் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் கேட்டிருந்தனர். இதையடுத்து, ராஜஸ்தான் தகவல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் கிராமப் பஞ்சாயத்து சார்பில் இரு காகித உறைகள் சம்மந்தப்பட்ட இருவருக்கு அனுப்பப்பட்டன. அந்த காகித உறைக்குள் ஆணுறை இருந்ததாகக் கூறிய இருவரும் அதுதொடர்பான படக்காட்சிகளை சமூக தளங்களில் பரப்பினர்.
ஆனால், ஆணுறை எதையும் அனுப்பவில்லை என்றும் விண்ணப்பதாரரின் கேள்விக்கான பதிலை மட்டுமே அனுப்பியதாகவும் ஊராட்சி அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இது தங்கள் மீது அவதூறு பரப்புவதற்காக செய்யப்பட்ட சதி என பஞ்சாயத்து தலைவர் காவல் துறையில் புகார் செய்தார். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
இது குறித்து பேசிய பத்ராவின் மாஜிஸ்ட்ரேட் ராஜ்குமார் கஸ்வா, ''இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போதே தங்களுக்கு ஆணுறை அனுப்பப்பட்டதாக விகாஸ் சவுத்ரி மற்றும் மனோகர் லால் ஆகியோர் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் தாங்கள் பதிலை மட்டுமே அனுப்பியதாகவும், காகித உறைகளில் வேறு எதையும் அனுப்பவில்லை என்றும் ஊராட்சி அதிகாரி எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.