கங்கையில் குப்பைக்கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம்!
கங்கை நதியில் குப்பைகளை கொட்டி அசுத்தம் செய்வோருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. .
கங்கை நதிக்கரையை சுத்தம் செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது, கங்கையில் கழிவுகளை கொட்டி நதியை அசுத்தம் செய்வோருக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கங்கை நதியை சுற்றி 500 மீட்டருக்குள் குப்பைகளை கொட்டுவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க அறிவுறுத்தியுள்ளது. நதிக்கரையிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் உள்ள பகுதியில் கட்டுமானம் உள்ளிட்ட எந்த வளர்ச்சி பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என தெரிவித்துள்ளது.
கங்கை நதியை சுத்தம் செய்ய 7000 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எந்த பயனும் இல்லை என்றும், இதுதொடர்பாக சி.பி.ஐ.விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

