2,000 ரூபாய் நோட்டுகளை நிறுத்த முடிவா? என்ன சொல்கிறது மத்திய அரசு..?

2,000 ரூபாய் நோட்டுகளை நிறுத்த முடிவா? என்ன சொல்கிறது மத்திய அரசு..?

2,000 ரூபாய் நோட்டுகளை நிறுத்த முடிவா? என்ன சொல்கிறது மத்திய அரசு..?

2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அரசுக்குச் சொந்தமான எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கி ஏடிஎம்களில் ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுகளுக்கு மறுசீரமைத்து வருவதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிப்பதாக கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கை 2016ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் மத்திய அரசு மேற்கொண்டது. இதன்படி, புழக்கத்திலிருந்த பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இவற்றுக்கு மாற்றாக, புதிய வடிவிலான ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு மக்களிடம் புழக்கத்துக்கு விடப்பட்டன.

ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பண மோசடிகள் அதிகரித்துவிட்டதாகவும், ஊழல் மோசடிகளில் சிக்கும் பணம் பெரும்பாலும் ரூ.2000 நோட்டுகளாகவே இருப்பதாகவும் புகார்கள் வந்தன. இதனால் ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்திலிருந்து நீக்கப்போவதாகச் செய்திகள் பரவின. நோட்டுகளை அச்சிடுவதைக் குறைத்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி கூறியது. மேலும் பெரும்பாலான ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுகள் வரவில்லை, இதனால் பொதுமக்கள் மத்தியில் ரூ.2000 நோட்டுகள் நிறுத்தப்பட்டுவிட்டதாகச் செய்திகள் பரவின.

இதனையடுத்து மார்ச் 16ஆம் தேதி மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சரான அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் " ரூ 2,000 நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்துவதற்குத் தற்போது திட்டம் எதுவும் இல்லை. மக்களிடையே சில்லறைத் தட்டுப்பாடு இருப்பதால் 2,000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.200, ரூ.500 நோட்டுகளை ஏடிஎம்களில் அதிகமாக வைக்கும் பணியில் இரண்டு பொதுத் துறை வங்கிகள் மட்டும் ஈடுபட்டன” என்று விளக்கம் அளித்தார்.

மேலும், "எஸ்பிஐ மற்றும் இந்தியன் வங்கி ஆகிய இரண்டு வங்கிகளும்தான் சமீபத்தில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. மக்களின் பயன்பாட்டுக்குத் தேவையான ரூபாய் நோட்டுகளை எந்த அளவுக்கு அச்சிடவேண்டும் என்பதை ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்த பிறகே அரசு முடிவெடுக்கும். ரூ.7.40 லட்சம் கோடி மதிப்புள்ள ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் இதுவரை அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளன, புழக்கத்தில் மற்றும் நாணய மதிப்பில் ரூ.2,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த முக மதிப்பு முறையே ரூ.5.49 லட்சம் கோடி மற்றும் ரூ.0.93 லட்சம் கோடி உள்ளது" என தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com