150வது பிறந்தநாள் - அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 நாணயம், தபால் தலை வெளியீடு

150வது பிறந்தநாள் - அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 நாணயம், தபால் தலை வெளியீடு

150வது பிறந்தநாள் - அரவிந்தரின் உருவம் பொறித்த ரூ.150 நாணயம், தபால் தலை வெளியீடு
Published on

புதுச்சேரியில் நடைபெற்ற அரவிந்தரின் 150வது பிறந்தநாளையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.150 மதிப்புள்ள நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி காணொளி மூலம் வெளியிட்டார். நாட்டின் இளைஞர்கள் அரவிந்தரின் சக்தியை உணர்ந்து இன்றைய பாரதத்தினுடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும் மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை எனவும் பிரதமர் மோடி பேசினார்.

இந்திய தேசியவாதியும், மெய்யியலாளரும், ஆன்மிகத் தலைவரும், கவிஞருமான அரவிந்தரின் 150ஆவது பிறந்தநாள் விழா புதுச்சேரியில் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஆரோவில் நிர்வாகக்குழு தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி, நிர்வாகக்குழு உறுப்பினரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் அரவிந்தரின் உருவப்படம் பொறித்த நாணயம் மற்றும் தபால் தலையினை பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொளி காட்சிமூலமாக வெளியிட்டார். விழா நடைபெறும் கம்பன் கலையரங்கில் அறிமுகம் செய்யபப்ட்டது.

இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “உலகிற்கே இந்தியா தலைமை தாங்கவேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். அவர் நினைத்தப்படி டி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றுள்ளது. அதனால் அவருக்கு தபால் தலை வெளியிடப்படுகின்றது. மேலும் எல்லோரும் நாணயமாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுகின்றது. தாய்மொழிக் கல்விதான் வேண்டும் என்று அரவிந்தர் நினைத்தார். அதனால்தான் புதிய கல்விக்கொள்கையை பிரதமர் கொண்டுவந்தார். அவரது பெருமையை போற்ற வேண்டும்” என ஆளுநர் தமிழிசை புகழாரம் செய்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ”புதுச்சேரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரவிந்தருக்கு தபால் தலையும், அவரது உருவம் பொறித்த நாணயமும் வெளியிடுவது மகிழ்ச்சிக்குரியது. ஜி20 நாடுகளின் தலைமையை இந்தியா ஏற்றிருப்பது பிரதமர் மோடியின் ஆன்மிக பலத்தை காட்டியது. உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலாவினர் வருகைதரும் புதுச்சேரியில் அரவிந்தரின் ஆசிரமம் இருப்பது சிறப்பு. ஆன்மிகம் தான் நாட்டையும், மாநிலத்தையும் உயர்த்தி பிடிக்கும்” என முதல்வர் ரங்கசாமி பேசினார்.

அரவிந்தரின் தபால் தலை மற்றும் அவரது உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி பேசும்போது, ”இன்று தேசத்தில் வரலாற்று முக்கியமான ஒரு தினமாக இந்த தினத்தை இந்திய தேசத்தில் வாழ்கிற நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அந்த வரிசையில் புதுச்சேரி மண்ணில், குறிப்பாக அரவிந்தரின் நினைவை போற்றுகிற விதத்தில் ஒரு நினைவு நாணயமும் அஞ்சல் தலையையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு புதிய உணர்வை, சக்தியை இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் கொடுக்கும். இந்த மாதிரியான அரவிந்தரின் யோக சக்தி என்பது ஒரு சமூக சக்தி என்பது மட்டுமல்ல; அது அனைவரையும் இணைக்கும் சக்தியாகும். சில தினங்களுக்கு முன்பு காசி தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்ககூடிய ஒரு வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்த காசி தமிழ்ச்சங்க நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்கள், குறிப்பாக தமிழ் இளைஞர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை பார்க்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. மொழியின் பெயரால் அரசியல் செய்வதை இளைஞர்கள் விரும்பவில்லை.

அரவிந்தர் ஒரு தனித்துவமிக்க அரசியல் ஞானியாகவும், ஆன்மிக சக்தியாகவும் விளங்கினார். தேசத்தின் விடுதலைக்காக அவர் பாடுபட்டதோடு மட்டுமல்ல; ஆன்மிக சக்தியையும் மேலே கொண்டுவர வேண்டும் என்று விரும்பி ஆன்மிக சக்தியின் உறுதியான நிலையை சுதந்திர வேட்கையை உருவாக்கி, இந்தியாவை தலை நிமிரச் செய்தார். மனிதனிலிருந்து இறைவன் வரை நாம் ஒருவரை போற்றுகிறோம் என்று சொன்னால் அவருடைய செயல்பாடுகளே காரணமாகும். மேலும் இன்றைய பாரத இளைஞர்கள் அரவிந்தரின் சக்தியை உணர்ந்து இன்றைய பாரதத்தினுடைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அந்த உணர்வுகளை தாங்கி நாம் இந்தியாவில் உள்ள சவால்களை எதிர்கொள்வோம்” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com