100 கோடி செலவில் சாலை.. ஆனா, மரங்களை மட்டும் வெட்டமுடியாது! என்ன கொடுமை சார் இது?
பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்கும் மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை விரிவாக்கம் செய்து 7.48 கி.மீ தொலைவுக்கு சாலை போட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகிறது.
பாட்னா-கயாவை இணைக்கும் சுமார் ஏழரை கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தச் சாலை,100 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சாலை போடுவதற்கு முன்பாக அப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக வனத்துறையை நாடி அனுமதி கேட்டிருக்கிறது கயா மாவட்ட நிர்வாகம். ஆனால், மரங்களை வெட்ட முதலில் அனுமதி மறுத்த வனத்துறை, பின்னர் மரங்களை வெட்டினால் 35 ஏக்கர் நிலத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.
மாவட்ட நிர்வாகத்தால் வனத்துறை கேட்ட இழப்பீட்டைத் தர முடியாததால், மரங்களை வெட்டுவதற்கான அனுமதியும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால், மாவட்ட நிர்வாகம் அந்த மரங்களை அப்படியே விட்டுவிட்டு சாலை போட்டிருக்கிறது.
பாட்னா-கயா பிரதான சாலையில் போடப்பட்டிருக்கும் இந்த 7.48 கி.மீ சாலை நெடுகிலும் நடுவே மரங்கள் இருக்கின்றன. இது தொடர்பான காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்தை பெற்றுள்ளது.