அருணாச்சல பிரதேச முதல்வர் கான்வாயில் ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் !
அருணாச்சல பிரதேச முதலமைச்சர் கான்வாயில் 1.8 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பீமா காண்டுவின் கான்வாய் வாகனத்தில் இருந்து ரூ.1.8 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் பகுதிதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுவதற்கு முந்தைய நாள் இரவு, முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் அப்பகுதியில் முதலமைச்சரின் கான்வாயில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அத்துடன் இவ்விவகாரத்தில் பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏன் இவ்விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தூங்கிக் கொண்டிருக்கிறது. தேவையான நடவடிக்கையை இவ்விவகாரத்தில் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.