ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்

ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்
ரூ.1.44 லட்சம் கோடி! உச்சத்திற்கு அருகே ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல்! - முழுவிவரம்

கோவிட் பெருந்தொற்று பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவரும் நிலையில், 2022 ஜூன் மாதத்திற்கான மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ.1,44,616 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.25,306 கோடி மாநில ஜிஎஸ்டி ரூ.32,406 கோடி, ஒருங்கிணைக்கப்பட்ட ஜிஎஸ்டி ரூ.75,887 கோடி (பொருள்கள் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.40,102 கோடி உட்பட), செஸ் வரி ரூ.11,018 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீது வசூலிக்கப்பட்ட ரூ.1,197 கோடி உட்பட) என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 2021 ஜூன் மாதத்தில் ரூ.4,380 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 83% அதிகரித்து 2022 ஜூன் மாதத்தில் (பொருள்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரி உட்படுத்தப்படாமல்) ரூ.8,027 கோடியாக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் 2021 ஜூன் மாதத்தில் ரூ.104 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வருவாய், 75% அதிகரித்து 2022 ஜூன் மாதத்தில் (பொருள்களின் இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வரி உட்படுத்தப்படாமல்) ரூ.182 கோடியாக அதிகரித்துள்ளது.

சென்ற மே மாதத்தை விடவும் அதிகமாக ஜூன் மாத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் பதிவாகியுள்ளது. 2022 ஏப்ரல் மாதத்தின் ஜிஎஸ்டி வசூலான ரூ.1,67,540 கோடிக்கு அடுத்தபடியாக 2022 ஜூன் மாதத்தில் 2-வது அதிகபட்ச ஜிஎஸ்டி மொத்த வசூல் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.92,800 கோடி என்று இருந்த நிலையில், 2022 ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் 56% அதிகமாகும். சென்ற வருடம் ஜூன் மாதத்தில் கோவிட் பாதிப்பு காரணமாக வரி வசூல் சரிந்திருந்த நிலையில், தற்போது வரி வசூல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் உள்நாட்டு பரிவர்த்தனைகளிலிருந்து (சேவைகளின் இறக்குமதி உட்பட) ஈட்டப்பட்ட வருவாய் 56% அதிகமாகும் என நிதி அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. பொருள்களின் இறக்குமதியிலிருந்து இம்மாதத்தின் வருவாய் 55% அதிகமாகும்.

ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததில் இருந்து 5-வது மாதமாக ரூ.1.40 லட்சம் கோடி என்ற அளவைக்கடந்து மாதாந்திர ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.10 லட்சம் கோடி என்பதற்கு மாறாக நிதியாண்டு 2022-23-ன் முதல் காலாண்டில் சராசரி மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.51 லட்சமாக இருந்தது. இது 37% அதிகரிப்பை காட்டுகிறது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- கணபதி சுப்ரமணியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com