ரோடோமாக் பென்ஸ் நிறுவனம் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் பெற்ற சுமார் ரூ.800 கோடி கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.
ரோடோமாக் பென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி. இவர் இந்தியாவில் உள்ள ஐந்து அரசு வங்கிகளிடமிருந்து ரூ.800 கோடிக்கு கடன் வாங்கியுள்ளார். அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, இந்திய ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் அவர் கடன் பெற்றுள்ளார். கோத்தாரிக்கு கடன் வழங்குவதற்கான வங்கிகள் விதிகளை சமரசம் செய்துள்ளன.
மேலும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் இருந்து ரூ. 485 கோடி கடன் மற்றும் அலகாபாத் வங்கியில் இருந்து ரூ. 352 கோடி கடன் வாங்கியது. ஒரு வருடம் கழித்து, கோத்தாரி இந்தத் தொகைக்கான வட்டி மற்றும் கடன் தொகையை திரும்ப செலுத்தப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கான்பூர் நகரத்தில் உள்ள கோத்தாரி அலுவலகம் கடந்த வாரம் பூட்டப்பட்டுள்ளது. கோத்தாரி கூட எங்கு இருக்கிறார் என இதுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், அலஹாபாத் வங்கியின் மேலாளர் ராஜேஷ் குப்தா கூறுகையில், கோத்தாரி சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் இந்தத் தொகை மீட்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்த விவகாரம் இந்திய அளவில் பூதாகரமாகியுள்ள நிலையில் சிபிஐயும், அமலாக்கத்துறையும் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. அதற்குள் மற்றொரு தொழிலதிபர் கம்பி நீட்டிவிட்டார்.