ரசகுல்லாவின் பூர்விகம் ஒடிஷா அல்ல; மேற்கு வங்கம் என தீர்ப்பு!
நல்ல செய்தியை சில சமயங்களில் இனிப்பான செய்தி என்றும் கூறுவார்கள். தற்போது மேற்கு வங்காள மாநிலத்துக்கு நிஜமாகவே இனிப்பான ஒரு செய்தி கிடைத்துள்ளது.
பெரும்பாலான மக்களின் அபிமானத்துக்குரிய இனிப்பு வகைகளில் ஒன்றான ரசகுல்லாவின் பூர்விகம் மேற்கு வங்காளமே எனக் கூறி, இரண்டரை வருடமாக நடந்த பிரச்னைக்கு முடிவு கட்டியுள்ளது சென்னையிலுள்ள புவிசார் குறியீட்டு ஆணையம்.
வெண்மையான நிறம். உருண்டையான தோற்றம். பஞ்சைத் தொடுவது போன்ற உணர்வு. இப்படி பெயரைக் கேட்டாலே நாவூறும் உணர்வு. அதுதான் ரசகுல்லா. திருப்பதி என்றால் லட்டு, திருநெல்வேலி என்றால் அல்வா எனக் கூறப்படும் நிலையில் ரசகுல்லா என்றால் கொல்கத்தா என்பது பரவலான ஒரு புரிதல். ஆனால் ரசகுல்லா என்ற இனிப்பின் பூர்வீகம் தங்கள் மாநிலமே என ஒடிஷாவும் உரிமை கோரியது. 600 ஆண்டுக்கு முன்பே ரசகுல்லா தங்கள் பகுதியில் புழக்கத்தில் இருந்ததாகக் கூறி ஆதாரங்களை அடுக்கினார் ஒடிஷா அமைச்சர்.
மேற்கு வங்கமும் சரிக்கு சமமாக மல்லுக்கட்டியது. இதையடுத்து இரு மாநிலங்களுமே ரசகுல்லாவுக்கு சொந்தம் கொண்டாடி சென்னையிலுள்ள புவிசார் குறியீட்டு ஆணையத்தை அணுகின. ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் நீடித்த வாத, பிரதிவாதங்கள் முடிவுக்கு வந்து இறுதியில் தீர்ப்பு மேற்கு வங்காளத்துக்கே சாதகமாக அமைந்துள்ளது. இப்போதுதான் தங்களுக்கு நிம்மதி எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் மேற்கு வங்க உணவுப் பதப்படுத்தல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மொல்லா. மேற்கு வங்கத்துக்கு இனிப்பான இந்த செய்தி ஒடிஷாவுக்கு கசப்பானதாகவே இருக்கும்.