மகளை பொறுப்பில் அமர்த்திய ஷிவ் நாடார்: ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவரானார் ரோஷினி !
ஹிந்துஸ்தான் கம்யூட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை தன் மகள் ரோஷினி நாடாருக்கு ஷிவ் நாடார் கொடுத்துள்ளார்
ஆசியாவின் தலைசிறந்த ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் 38 வயதான ரோஷினி நாடார். இவர் அந்நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள். தந்தைக்குப் பிறகு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தலைமை தாங்கும் பொறுப்புக்கு தற்போது வந்துள்ளார்.
தன் மகளுக்காகத் தலைவர் பதவியை விட்டுக்கொடுத்த ஷிவ் நாடார் ‘எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நிறுவனத்தில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம்’ என இது குறித்து தெரிவித்துள்ளார்.
ரோஷினி ஹெச்.சி.எல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை ஹெச்.சி.எல் நிறுவனமே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார பெண் ரோஷினி நாடார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது சொத்து மதிப்பு 31,400 கோடி ரூபாய்க்கு மேல்.
அமெரிக்காவில் எம்.பி.ஏ முடித்தவர். உலக பொருளாதார மன்றத்தின் முன்னாள் மாணவர்.வனவிலங்குகள் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட ரோஷினி நாடார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘தி ஹபிடேட்ஸ்’ என்ற அறக்கட்டளையும் உருவாக்கியுள்ளார்.
2017 முதல் 2019 வரை உலகின் சக்தி வாய்ந்த நூறு பெண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார் அவர். ஷிவ் நாடார் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக தொடருவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.