அஜித் பவார் மரணம்| FIR பதிவு செய்ய காவல்துறை மறுப்பதாக குற்றச்சாட்டு!
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக மும்பை காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுப்பதாக என்.சி.பி எம்.எல்.ஏ ரோஹித் பவார் குற்றம் சாட்டியுள்ளார். இது விபத்து அல்ல, திட்டமிடப்பட்ட சதி என கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி காலை விமான விபத்தின்போது உயிரிழந்தார். உள்ளாட்சித் தேர்தல்கள் தொடர்பான கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புனேயில் இருந்து அவர் பாராமதிக்கு தனி விமானத்தில் சென்றார். அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விமான விபத்தில் அஜித் பவாருடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி, ஓர் உதவியாளர், விமானி-இன்-கமாண்ட் மற்றும் முதல் அதிகாரி என 5 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வழக்கை மத்திய விமான விபத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்தசூழலில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணித்த விமான விபத்து தொடர்பாக மும்பை காவல்துறையினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுப்பதாகவும், இந்த மறுப்பு விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும், அரசாங்கமும் அதிகாரிகளும் யாரையோ பாதுகாக்க இவ்வாறு செய்வது போல் தெரிகிறது என்றும் என்.சி.பி எம்.எல்.ஏ ரோஹித் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
காவல்துறை மீது குற்றச்சாட்டு..
அஜித் பவார் மரணம் குறித்து பேசியிருக்கும் ரோஹித் பவார், “அஜித் பவாரின் விமான விபத்து தொடர்பாக உரிய நடவடிக்கைக்காகக் காத்திருந்தபோது, டிஜிசிஏ அறிக்கை வந்தது, இந்த விபத்து விஎஸ்ஆர் நிறுவனத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டது என்று கூறியுள்ளது. ஆனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுக்கிறார்கள். இதுபோன்ற நிலைமை தொடர்ந்தால் அஜித் பவாருக்கு நீதி கிடைக்குமா என்று தெரியவில்லை.
அமித் பவாரின் மரணம் விபத்தா அல்லது நாசவேலையா என்பதை விசாரிப்பதில் இருந்து எங்களை யாரும் தடுக்க முடியாது. நீதி கிடைக்கும்வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று கூறினார்.

