கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி ஒசூா்- பாகலூர் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரம் கியாஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு 14.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. அதிகாலை 3 மணி முதல் இரவு வரை எவ்வித பணப்பரிவர்த்தனையும் நடைபெறாததால் ஏற்பட்ட சந்தேகத்தால் ஊழியர்கள் சென்று பார்த்தபோதுதான் இந்த திருட்டு தெரியவந்தது.
அதற்கு முந்தைய தினம், அதாவது ஜூலை 5ஆம் தேதி ஒசூர், ஆவலப்பள்ளி ஹட்கோவில் உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. அதே நாள் பெங்களூரு அருகே பெல்லந்தூர் மற்றும் ஹசன் மாவட்டங்களில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு சுமார் 20 லட்சம் ரூபாய் கொள்ளை போனது.
இந்நிலையில் ஜூலை 6ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து 25 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளைகள் நிகழ்ந்த ஏடிஎம் மையங்களில் பதிவான விரல் ரேகைகள் அனைத்தும் ஒன்று போல் இருந்தன.
அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கொள்ளையர்கள் போர்வையால் தங்களை மூடிக்கொண்டு ஏடிஎம்மில் நுழைந்து சிடிடிவி கேமரா லென்ஸுக்கு கருப்பு பெயிண்ட் அடித்துவிட்டு கேஸ் கட்டர்களை பயன்படுத்தி கொள்ளையடித்திருந்தனர்.
இதில் ஈடுபட்டவர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என ஓசூர் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் ஹரியானா சென்று குற்றவாளிகளை தீவிரமாக தேடினர். அப்போது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் பெங்களூருவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஜூலை 27 ஆம் தேதி பெங்களூரூவில் ஹரியானாவை சேர்ந்த சபீர் என்பவரை கைது செய்தனர்.
இவர் ஒரு கண்டெய்னர் லாரி ஓட்டுநர் என்பதும், ஹரியானாவை சேர்ந்த அவரது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஹரியானாவிலிருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் லோடு ஏற்றி வந்த இவர்கள், ஓசூர் அருகே உள்ள காமன்தொட்டி என்ற இடத்தில் ஒரு காரையும், பெங்களூரு பகுதியில் ஒரு காரையும் திருடி உள்ளனர். அதன் பின்னர் பெங்களூரு அருகே பெல்லந்தூர், தமிழகத்தில் ஓசூர், ஆந்திராவில் சித்தூர் என தொடர்ச்சியாக ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அவரது கூட்டாளிகள் ஹரியானா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரம் தயார் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கின்றனர்.
அவர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தை உடைப்பது அதில் உள்ள பணத்தை எடுப்பது போன்ற நுணுக்கங்கள் அத்துபடியாக இருந்திருக்கின்றன. இது தவிர ஏடிஎம் மையங்களில் காவலாளி இல்லாமல் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வந்ததும் அவர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது.
இந்நிலையில்தான், கேரள மாநிலம் திருச்சூரில் ஏழு பேர் கொண்ட கும்பல் நேற்று (செப். 27) அதிகாலை இரண்டரை மணி முதல் 4 மணிக்குள் எஸ்பிஐ வங்கியின் 3 ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்தது. மப்ராணம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மில், 30 லட்சம் ரூபாயும், கொழாலி ஏ.டி.எம்.மில் 25 லட்சம் ரூபாயும், சொரணூர் ஏ.டி.எம்.மில் ஒன்பதரை லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையடித்த பணத்துடன் அக்கும்பல் தமிழகத்திற்குள் நுழைந்தது.
இத்தகவல் காலை 6 மணியளவில் தமிழக காவல்துறைக்கு தெரியவந்தது. கொள்ளையர்கள் கிரெட்டா காரில் தப்பியதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக களமிறங்கிய தமிழக காவல்துறையினர் அனைத்து சோதனைசாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்தினர். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே கிரெட்டா காரை ஒரு கண்டெயினர் லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பியதாக தமிழக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையே கொள்ளை கும்பல் கண்டெயினர் லாரியில் பாலக்காடு வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது. கோவை, அவிநாசி, பெருந்துறை வழியாக நாமக்கல்லை அடைந்துவிட்டனர்.
காலை 8:30 மணியளவில் குமாரபாளையம் கத்தேரி பிரிவில் வாகன தணிக்கையின்போது கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றுள்ளது. சங்ககிரி நோக்கி சென்ற லாரி அங்கு சுங்கச்சாவடி இருந்ததால் காலை 9:00 மணியளவில் மீண்டும் வந்த வழியிலேயே திரும்பியுள்ளது. இரண்டுமுறை சங்ககிரியை சுற்றிவந்த லாரி பின்னர் வெப்படை சாலையில் திரும்பியது. இதற்கிடையில் காவல்துறையினர் தகவல் பறக்க அனைத்து இடங்களிலும் காவல் பலப்படுத்தப்பட்டது.
தறிகெட்டு பறந்த கண்டெயினர் லாரி இரண்டு இருசக்கர வாகனம், ஒரு கார் உள்ளிட்டவற்றை மோதித்தள்ளிவிட்டு தொடர்ந்து வேகமாக சென்றுகொண்டிருந்தது. காலை 9:50 மணியளவில் வெப்படை அருகே உள்ள சன்னியாசிபட்டியில் காவல்துறையினர் கண்டெயினர் லாரியை மடக்கி பிடித்தனர். லாரி ஓட்டுநர் அவருடன் இருந்த மற்ற நால்வர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு லாரியை அதே ஓட்டுநரை வைத்தே வெப்படை காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்ல முயற்சி மேற்கொண்டனர்.
அப்படி வரும்போது கண்டெயினருக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக லாரிக்கு பின்னால் பாதுகாப்பாக சென்ற காவல்துறையினர் காலை 10: 30 மணியளவில் தோப்புக்கடை அருகே வண்டியை நிறுத்தி ஜூமான் என்ற லாரி ஓட்டுநரை வைத்து கண்டெயினரை திறக்கவைத்துள்ளனர். கண்டெயினரை திறந்தவுடன் உள்ளே இருந்த இருவர் கீழே இறங்கியுள்ளனர்.
ஒருவர் கையில் நீல நிற பையில் பணத்துடன் காவல் ஆய்வாளர் தவமணியை தாக்கிவிட்டு தப்பியோட, ஓட்டுநரும் அவருடன் தப்பியோட முயன்றிருக்கிறார். இதை தொடர்ந்து காவல் ஆய்வாளரும், துணை ஆய்வாளர் ரஞ்சித்தும் அவர்களை விரட்டி சென்றுள்ளனர். காலை 10:45 மணியளவில் கண்டெயினர் ஓட்டுநர் ஒரு இடத்தில் காவல் துணை ஆய்வாளரை தாக்கியுள்ளார். அப்போது துணை ஆய்வாளரை காப்பதற்காக ஆய்வாளர் சுட்டதில் கண்டெயினர் ஓட்டுநர் ஜுமான் கொல்லப்பட்டார். பணப்பையுடன் தப்பியோட முயன்ற மற்றொருவரை காவல் ஆய்வாளர் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார்.
இதற்கிடையே, கண்டெய்னர் லாரியில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை, இயந்திரம் மூலம் காவல் துறையினர் எண்ணினர். அதில், 67 லட்சம் ரூபாய் என தெரியவந்தது. திருச்சூரில் 3 ஏடிஎம்களில் கொள்ளைபோன பணம் எவ்வளவு என்பதை, எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் தெரிவித்த பின்னர்தான், கொள்ளையடிக்கப்பட்ட பணம் எவ்வளவு என்பது முழுமையாக தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
அதேநேரம், ஹரியானாவைச் சேர்ந்த வங்கி ஏடிஎம் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முன் பல கொள்ளை சம்பவங்களை இதே கும்பல் அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அடுத்தடுத்தகட்ட விசாரணையில் இதுபற்றிய முழு தகவல்கள் வெளிவரக்கூடும். சினிமாவை மிஞ்சிய இக்கொள்ளைச் சம்பவம், பல மாநில (ஹரியானா, ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உட்பட கிட்டத்தட்ட 7 மாநிலங்கள்) காவல்துறையை அலெர்ட் செய்துள்ளது!