5 லட்சம் மக்கள்: பீகாரில் கூடிய INDIA கூட்டணித் தலைவர்கள்.. கலங்கியிருக்கும் எதிரணி?!

பீகார் மாநிலம் பாட்னாவில் I-N-D-I-A கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்துகொண்டது பேசுபொருளாகி உள்ளது
தேஜஸ்வி யாதவ்
தேஜஸ்வி யாதவ்ட்விட்டர்

I-N-D-I-A கூட்டணியிலிருந்து விலகிய நிதிஷ் குமார்

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.

முன்னதாக, பாஜக அரசை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதலில் தொடங்கியவர் பீகார் முதல்வரான நிதிஷ்குமார். அவர் தொடங்கிய அந்தப் பயணத்தில் 28 கட்சிகள் இணைந்து 3 கூட்டங்கள் நடத்தப்பட்டு, அக்கூட்டணிக்கு I-N-D-I-A என பெயர் வைக்கப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, நிதிஷ்குமார் அக்கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் இணைந்தார். அதாவது, மாநிலத்தில் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு பாஜகவுடன் மீண்டும் இணைந்து முதல்வரானார். இதனால், எதிர்க்கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

5 லட்சம் மக்கள் குவிந்த ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம்

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது.

இதையடுத்து அவரது மகனான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். முன்னதாக, முக்கிய நகரான முசாபர்நகரில் தொடங்கிய தேஜஸ்வியின் யாத்திரை 33 மாவட்டங்களுக்கும் சென்ற நிலையில், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நேற்று (மார்ச் 3) ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்தியப் பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது யாத்திரையை தள்ளிவைத்துவிட்டு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேஜஸ்வி யாதவின் ஜன் விஸ்வாஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

நிதிஷ்குமாரை விமர்சித்த லாலு பிரசாத் யாதவ்!

இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்ட வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "15 மணி நேரம் தொடர் மழை, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய லட்சக்கணக்கான மக்கள், குறுகிய நேரத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் என அனைத்தையும் மீறி, உங்கள் அளப்பரிய அன்பினாலும், தளராத ஆதரவினாலும், அபரிமிதமான ஒத்துழைப்பினாலும் இந்த சாதனைப் பேரணி நிறைவு பெற்றது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடி இந்து அல்ல என விமர்சித்தார். அவர் பேசும்போது, “பிரதமர் மோடி இந்து அல்ல; அவரது தாய் இறந்தபோது அவர் மொட்டையடிக்கவில்லை. எனவே, அவர் இந்துவாக இருக்க முடியாது” என்றவர் நிதிஷ்குமாரையும் கடுமையாகச் சாடினார்.

கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ், ”நாங்கள் நிதிஷ்குமாரை தவறாக பயன்படுத்தவில்லை. அவரைப் பயன்படுத்தி முறைகேடு செய்யவில்லை. மக்களுக்கான நல்ல திட்டமான வேலையை மட்டுமே வழங்கினோம். இதனைக் கண்டு அஞ்சி நிதிஷ்குமார் மீண்டும் மோடியின் காலடிக்கே சென்றார். உண்மையில் நிதிஷ்குமாருக்கு வெட்கமாக இல்லையா” எனக் கேள்வி எழுப்பினார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 120 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. எனவே, இந்த 2 மாநிலங்களிலும் பாஜகவைத் தோற்கடித்துவிட்டால், அக்கட்சியால் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது” என்றார்.

இந்த நிலையில், பீகார் மாநிலம் பாட்னாவில் I-N-D-I-A கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்துகொண்டது பேசுபொருளாகி உள்ளது. அதாவது இந்தப் பொதுக்கூட்டப் பேரணியில் 5 லட்சம் மக்கள் கூடி, எதிரணியைக் கலங்கடித்திருப்பதாக விமர்சனம் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com