மேஜர் தம்பதியினரை பிரித்து வைத்த பெற்றோர்... சேர்த்து வைத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

மேஜர் தம்பதியினரை பிரித்து வைத்த பெற்றோர்... சேர்த்து வைத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்
மேஜர் தம்பதியினரை பிரித்து வைத்த பெற்றோர்... சேர்த்து வைத்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

(கோப்பு புகைப்படம்)

ஒரு பெண் தனக்கு எது நல்லது, எது நல்லதல்ல என்பதை தீர்மானிக்க அவருக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும் 21 வயதான இளம்பெண்ணும் தங்களது சுயவிருப்பத்தின் அடிப்படையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தன்னுடைய மகளை கடத்தி இளைஞர் திருமணம் செய்துகொண்டதாக பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இளைஞரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல்துறையினர்,  அந்த இளம்பெண்ணை அவரது விருப்பத்திற்கு எதிராக அவரின் பெற்றோரிடமே ஒப்படைத்துவிட்டனர்.

இந்நிலையில், தன் மனைவியை மீண்டும் தன்னிடமே ஒப்படைக்கக்கோரி இளைஞர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இளைஞரால் கடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அந்தப் பெண் தனது சுய விருப்பத்தின் அடிப்படையிலேயே திருமணம் செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் அப்பெண்ணின் பள்ளிச் சான்றிதழ்களின் அடிப்படையில் அவர் 1999-ம் வருடம் அக்டோபர் மாதம் பிறந்தவர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் உண்மைத்தன்மையை இவ்வாறாக அறிந்துகொண்ட நீதிபதிகள், இளம்பெண் தன் கணவருடன் வாழ முழு உரிமை இருக்கிறது என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், "ஒரு நபர் தனது வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை சமூகத்தால் தீர்மானிக்க முடியாது. அரசியலமைப்பு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது. ஒருவரின் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் வாழ்க்கைக்கான உரிமையின் ஒரு முக்கிய அம்சமாகும். தற்போதைய விஷயத்தில், இப்பெண் மேஜர் என்பதால் யாருடன் வாழ விருப்பம் என முடிவெடுப்பதற்கு முழு உரிமை இருக்கிறது. எனவே மூன்றாவது நபரின் தடையோ அல்லது தலையீடோ இல்லாமல் தன்னுடைய விருப்பப்படி இளம்பெண் தன் வாழ்க்கையைத் தொடரலாம் என்று கூறியிருக்கும் நீதிபதிகள், இளைஞர் மீது காவல்துறையால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்துள்ளனர்.

இதையடுத்து இளம்பெண் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதுமட்டுமல்லாமல் அத்தம்பதி தங்களது வீட்டிற்குச் சென்று சேரும்வரை காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com