உலக பணக்காரர் பட்டியல்: 99 வயதில் இடம்பிடித்த இந்தியர்!

இந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில், 99 வயது நிறைந்த கேசுப் மஹிந்திராவும் இடம்பிடித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர் பட்டியல்
ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர் பட்டியல்file image

ஃபோர்ப்ஸ் நிறுவனம் 37 ஆண்டுகளாக உலக பில்லியனர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான உலக பில்லியனர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட் முதலிடத்தை பிடித்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கிறார். பிரபல LVMH நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட்டின் சொத்து மதிப்பு 211 பில்லியன் டாலராக உள்ளது.

2வது இடத்தில் எலான் மஸ்க் உள்ளார். அவருக்கு 180 பில்லியன் டாலர் சொத்து உள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி 9வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு 3வது இடம்பிடித்த கெளதம் அதானி, இந்த முறை 24வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். தவிர, இந்த முறை இந்திய பணக்காரர்கள் அதிகளவில் சாதனை படைத்துள்ளனர். இப்பட்டியலில் கடந்த ஆண்டு 166 ஆக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை, இந்த முறை 169 ஆக அதிகரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் 50 வயதில் நிறுவனத்தைத் தொடங்கியவர்கள் முதல் 35 வயது உள்ளவர்கள் வரை உலக பில்லியனர்கள் ஆகியுள்ளனர். இதில், நன்கறியப்பட்ட ஆனந்த் மஹிந்திரா தவிர, அவரது மாமா கேசுப் மஹிந்திரா வரை இந்தியாவின் புதிய கோடீஸ்வரர்களில் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் கேசுப் மஹிந்திரா, தன்னுடைய 99 வயதில் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பதுதான் பேசுபொருளாகி உள்ளது. ஆம், இந்தப் பட்டியலில் மிக அதிக வயதான பில்லியனர் என்ற சாதனையை கேசுப் மஹிந்திரா வசப்படுத்தியுள்ளார்.

2012ஆம் ஆண்டுவரை 50 ஆண்டுகள் மஹிந்திரா குழுமத்தின் தலைவராகப் பொறுப்பேற்று, அந்நிறுவனத்தை வழிநடத்தியபோதும், கேசுப் மஹிந்திராவால் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை. இந்த நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகிய 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இடம்பிடித்துள்ளார். கேசுப் மஹிந்திரா, 1947ஆம் ஆண்டு அவருடைய தந்தை மற்றும் மாமாவால் நிறுவப்பட்ட மஹிந்திரா குழுமத்தில் இணைந்தார். பின்னர், 1963ஆம் ஆண்டு அக்குழுமத்தின் தலைவரானார். அவர் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்டன் பட்டம் பெற்றவர். ஆவார். அவருக்கு, 1987ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசாங்கத்தால் செவாலியர் டி எல்'ஆர்ட்ரே நேஷனல் டிலா லெஜியன் டி'ஹானர் என்ற விருது வழங்கப்பட்டது. 2004 முதல் 2010 வரை, புதுடெல்லியில் பிரதம அமைச்சக கவுன்சிலிலும் உறுப்பினராகப் பதவி வகித்தார்.

2012ஆம் ஆண்டு தன்னுடைய மருமகன் ஆனந்த் மஹிந்திராவிடம், மஹிந்திரா குழுமத்தை கேசுப் ஒப்படைத்த பிறகு, அந்த குமுமம், பொலிரோ, ஸ்கார்பியோ போன்ற பல மாடல்களை கார்களை தயாரிக்க ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com