சபரிமலை கோயில் வருவாய் 28 நாட்களில் ரூ.104 கோடியை தாண்டியது !
சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருமானம் 28 நாளில் ரூபாய் 104 கோடியை தாண்டியதாக திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் என்.வாசு தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பின்பு, டிசம்பர் 27-ஆம் தேதி மண்டலப் பூஜை நிறைவடைந்து கோயிலின் நடை மூடப்படும். பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ஆம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 15-ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி காலை 8.06 முதல் காலை 11.13 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஐயப்பனுக்கு வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கே நிறுத்தப்பட்டு கோயிலின் நடை அடைக்கப்படும். பின்பு கோயிலில் கிரகண தோஷ நிவரத்தி பூஜைகள் செய்யப்பட்டு நடை திறக்கப்படும். அதுவரை பக்தர்கள் யாரும் கோயிலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருவாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் என்.வாசு " இப்போது வரை சபரிமலை ஐயப்பன் கோயில் வருவாய் ரூ.104 கோடியை தாண்டியுள்ளது. கடந்தாண்டு இதே நாளில் ரூ.64.16 கோடியாக இருந்தது. இன்னும் அரவணப் பிரசாதம் உள்ளிட்டவையின் விற்பனையால் கிடைக்கப் பெற்ற வருவாய் கணக்கிடப்படவில்லை. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல்லில் இருந்து பம்பாவுக்கு ரோப் கார் சேவையை தொடங்கவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார் அவர்.