ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை மூன்று பேர் கொண்ட கும்பல் சாகும் வரை அடித்துள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் சமாத் கான். 70 வயதான இவர் நேற்று தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் அப்துலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் கீழே விழுந்த அப்துல் மீண்டும் எழ முயற்சித்திருக்கிறார். ஆனால் அங்கே வந்த மற்ற இரண்டு நபர்களும் அப்துலை தாக்க தொடங்கினர். இதனால் அப்துலால் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடல் முழுக்க ரத்தம், ஒரு கை முற்றிலும் சிதைந்து போன நிலையில் மூச்சுபேச்சின்றி கிடந்தார். இதனால் அப்துல் இறந்துவிட்டதாக நம்பிய அந்தக் கும்பல் அங்கிருந்து சென்றிருக்கிறது. அப்துலை மூன்று பேர் சேர்ந்து தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. அதில் அப்துல் தாக்கப்படுவதை அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லும் பலர் பார்க்கின்றனர். ஒருசிலர் மொட்டை மாடிகளில் நின்றும் நடப்பவற்றை காண்கின்றனர். இருப்பினும் யாரும் அப்துலுக்கு உதவ முன்வரவில்லை.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்துல் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக கருதப்படுபவர் ஜூனைட். இவருக்கு எதிராக உள்ளூர் காவல்நிலையத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு குற்றவாளியான முகமது யூசப் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அப்துலின் சகோதரர், தனது அண்ணனுக்கு சொந்தமான நிலத்தை தாக்குதல் நடத்திய நபர் வெகு நாட்களாக கேட்டுக்கொண்டிருந்ததாகவும், ஆனால் தன் அண்ணன் அதனை விற்க மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே அந்த நபர் மீது பலரும் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்துலின் சகோதரர் குற்றஞ்சாட்டியுள்ளார். அலகாபாத் போலீசார் இதுதொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.