கோவையில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவையில் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இரவே சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்ட கர்ணன், ஏர் இந்தியா விமானம் மூலம் கொல்கத்தா அழைத்துச் செல்லப்பட்டார். கொல்கத்தா சென்றதும் அங்கு விமான நிலையத்தில் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். பலத்த போலீஸ் காவலுடன் அங்கிருந்து ஒரு வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட கர்ணன் கொல்கத்தா நகரில் உள்ள பிரசிடென்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக , இதனிடையே ஜாமீன் கோரி கர்ணன் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கர்ணனை கைது செய்ய மே 9ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், கைது நடவடிக்கையில் இருந்து அவர் தப்பித்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கர்ணனின் செல்போன் எண்ணைக் கொண்டு தமிழக காவல்துறையின் உதவியுடன் கொல்கத்தா காவல்துறையினர் கர்ணனை கோவை மலுமிச்சம்பட்டியில் கைது செய்தனர்.