மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்த முன்னாள் ராணுவவீரர்
கர்நாடகா மாநிலம் ஹஸ்ஸான் மாவட்டத்தில், சக்லேஷ்பூர் தலூக்காவில் முன்னாள் ராணுவ வீரரான படேல் ஆரெ.எல் என்பவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். படேல் தனது நண்பருடன் டீத்தூள் வாங்க சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீ கங்கா ஹோட்டலுக்கு வெளியே இருவரும் நின்றபோது திடீரென மரம் முறிந்து விழுந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் மரக்கிளைகளை அகற்றி இருவரையும் வெளியே எடுத்துள்ளனர். இதில் படேலின் நண்பருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. படேலை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்போது பாதிவழியிலேயே உயிரிழந்தார். மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த படேல் தனது நண்பரைப் பார்க்க சென்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெய்துவரும் பலத்த மழையால் பல மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து, மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. கடந்த மாதம் இதேபோல் ஒரு முதியவர்மீது மரம் முறிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.