பீகார்: 65% இடஒதுக்கீட்டு மசோதா ஒருமனதாக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வின் முழு விவரங்களை வெளியிட்டுப் பேசிய முதல்வர் நிதீஷ்குமார், ’இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தப்படும்’ எனத் தெரிவித்தார்.
மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு 20%, பழங்குடியினருக்கு 2%, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்தப்பட்டோருக்கு 43% ஆக உயர்த்த பரிந்துரை செய்தார்.
அப்போது அவர், ”பட்டியலினத்தவரின் இடஒதுக்கீடு 13% இருந்து 20% ஆகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 30% இருந்து 43% ஆகவும், பழங்குடியினர் இடஒதுக்கீடு முன்பிருந்த 2% அப்படியே நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டது. நிதீஷ்குமார் பரிந்துரைத்தப்படி, இது நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான மத்திய அரசின் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும் சேர்த்து, பீகாரில் இடஒதுக்கீடு 75% எனக் கருத்துக்கள் கூறப்பட்டன.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் இன்று மொத்த இடஒதுக்கீட்டு அளவை 65% ஆக உயர்த்த சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா, சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: #7YearsOfDemonetisation | பாஜக-வை சாடி எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் விமர்சனம்!