நடுக்கடலில் விபத்தில் சிக்கிய கடற்படை அதிகாரிக்கு விசாகப்பட்டினத்தில் சிகிச்சை!

நடுக்கடலில் விபத்தில் சிக்கிய கடற்படை அதிகாரிக்கு விசாகப்பட்டினத்தில் சிகிச்சை!
நடுக்கடலில் விபத்தில் சிக்கிய கடற்படை அதிகாரிக்கு விசாகப்பட்டினத்தில் சிகிச்சை!

படகு போட்டியின்போது நடுக்கடலில் விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட கடற்படை அதிகாரி இந்தியா அழைத்து வரப்பட்டார்.

உலகை கடல் வழி சுற்றிவரும் 'கோல்டன் குளோப்' எனப்படும் சர்வதேச படகுப் போட்டி பிரான்சில் இருந்து ஜூலை 1 ஆம் தேதி துவங்கியது. 30 ஆயிரம் மைல் துாரத்தை தனி நபராக படகில் கடந்து வர வேண்டும் என்பது போட்டி. நவீனத் தொழில்நுட்பங்களை பயன் படுத்தாமல் பாய்மர படகுகளை கொண்டு நடத்தப்பட்ட போட்டி இது. இதில் பலர் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் கடற்படையைச் சேர்ந்த கமாண்டர், அபிலாஷ் டோமி (39) கலந்து கொண்டார். இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர். உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, 'துரியா' என்ற படகில் 84 நாட்களில் 10 ஆயிரத்து 500 மைல் கடந்து போட்டியில் மூன்றாவது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே தென் இந்தியப் பெருங்கடலில் பயணித்தபோது, புயல் காரணமாக அவர் சென்ற படகு சேதமடைந்தது. இதில் அவரது முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் இந்திய கடற்படைக்கு தகவல் அனுப்பினார்.

 இதுகுறித்து அறிந்த ஆஸ்திரேலிய கடற்படையும் ரீயூனியன் தீவில் இருந்து வந்த பிரெஞ்ச் கப்பலான ஓஸ்ரிஸும் அவரை மீட்டது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த இந்திய போர்க்கப்பலும் விமானமும் மீட்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில் பத்திரமாக மீட்கப்பட்ட அவர், நியூ ஆம்ஸ்டர்டம் என்ற சிறிய தீவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

‘கடல், நம்பமுடியாத அளவுக்கு கடுமையாக மாறிவிட்டது. கடலில் பயணம் செய்த அனுபவம் மற்றும் கடற்படையில் பெற்ற பயிற்சியின் காரணமாகவே உயிர்தப்பினேன்’ என்று அபிலாஷ் டோமி கூறியிருந்தார்.

இந்நிலையில் ஆம்ஸ்டர்டாம் தீவில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்டார். இந்திய போர்க்கப்பலான ஐஎன்எஸ் சத்புரா மூலம் விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டார். அங்குள்ள கடற்படை மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com