“குடியரசு தினவிழா தமிழ்நாடு அணிவகுப்பு” - சர்ச்சையாகும் ஆடை விவகாரம்..!

“குடியரசு தினவிழா தமிழ்நாடு அணிவகுப்பு” - சர்ச்சையாகும் ஆடை விவகாரம்..!
“குடியரசு தினவிழா தமிழ்நாடு அணிவகுப்பு” - சர்ச்சையாகும் ஆடை விவகாரம்..!

70வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு நேற்று டெல்லியில் நடந்த மாநிலங்களின் கலாச்சார அணிவகுப்பில் தமிழக பெண்களின் ஆடை சித்தரிப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

70வது குடியரசு தினவிழா நேற்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டின் தலைநகரமான டெல்லியில் அனைத்து மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் தமிழ்நாடு கலாச்சார அணிவகுப்பில், தமிழக விவசாயப் பெண்களும், விவசாயிகளும் நாற்று நடுவது மற்றும் ஏறு தழுவுதல் போல சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்த சித்தரிப்பில் தமிழகப் பெண்கள் ரவிக்கை அணியாமல், புடவை மட்டும் அணிந்திருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் விவசாயிகளும் ஏறு தழுவுவது தவிர்த்து, வீட்டிலிருக்கும் மற்ற நேரத்திலும் கோவணம் மட்டுமே அணிந்திருப்பது போல காட்டப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பலரும், 1920ஆம் ஆண்டுகளில் தமிழகப் பெண்கள் ரவிக்கை அணியாத நிலை இருந்தது. திருவாங்கூர் சமஸ்தானத்தில் அந்த முறை கடைபிடிக்கப்பட்டது. அதுவும் அய்யா வைகுண்டரின் போராட்டத்திற்கு பின்னர் அடுத்தடுத்த போராட்டங்களால் முற்றிலும் அகற்றப்பட்டது. தற்போது தமிழர்கள் பொருளாதார ரீதியாகவும், ஆடை நாகரீகத்திலும் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் தற்போதும் அவர்களை இப்படி சித்தரிப்பது முறையற்றது. ஒரு முக்கிய நிகழ்ச்சியில் தேசத் தந்தை காந்தி மற்றும் தமிழகம் குறித்து காண்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் பங்கேற்கும் குடியரசு தினவிழாவில் தமிழர்கள் 19ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தால் என்பதை காண்பிக்க வேண்டிய அவசியம் என்ன ? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆனால் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், “நிகழ்ச்சி தொடர்பாக பல கேள்விகள் எழும்பியுள்ளன. இந்த நிகழ்வு உள்நோக்கம் கொண்டதல்ல. காந்தியின் 150வது பிறந்த தினம் வரவுள்ளதை முன்னிட்டு இந்தக் கலாச்சார அணிவகுப்பு நடத்தப்பட்டது. தமிழக விவசாயிகள் மற்றும் விவசாயப் பெண்கள் அரை ஆடையுடன் இருப்பதைக் கண்டு, இனி தானும் அரை ஆடையுடன் இருப்பேன் என மகாத்மா காந்தி மாறினார். அதனை வெளிக்காட்டும் வகையில் இந்த அணிவகுப்பு சித்தரிக்கப்பட்டிருந்தது” என தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com