இந்தியா கூட்டணிக்கு மாற்றாக 3-ம் அணி : ஒன்று சேர்கிறதா CJP + திமுக? பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின்?
மத்திய பாஜக அரசுக்கு எதிராக களமாடும் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைக்கவேண்டும் என்ற நோக்கில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியில் பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு கட்சிகளும் இணைந்தன.
இந்த கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், அதனை எல்லாம் சரி செய்து இப்படி ஒரு கூட்டணி உருவாக்கப்பட திமுக ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது. அதோடு பல்வேறு மாநிலங்களில் இந்த கூட்டணியில் மோதல்கள் வெடித்த நிலையில், தமிழ்நாட்டில் இந்த கூட்டணி ஒற்றுமையாக இருந்து தொடர்ந்து பல்வேறு தேர்தல்களில் வெற்றிபெற்றது.
அதேபோல நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் திமுக தலைமையில் இந்த கூட்டணி போட்டியிட்ட நிலையில், இந்த கூட்டணி முதல் முறையாக தோல்வியை தழுவியது. அதனைத் தொடர்ந்து திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் இருந்து காங்கிரஸ்,விசிக, IUML ஆகிய கட்சிகள் வெளியேறியதோடு, தவெக அரசின் அமைச்சரவையிலும் பங்கேற்றன. மேலும் இடதுசாரிகளும் திமுக கூட்டணியில் இருந்து விலகின.
அதோடு, கடந்த மாதம் டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திலும் திமுக பங்கேற்காததோடு, இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனும் கூறியிருந்தார். இதனால் இந்தியா கூட்டணியில் திமுக இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இந்த சூழலில், டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் மூலம் பாஜக அரசையே பணிய வைத்த கரப்பான் ஜனதா கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து மூன்றாவது அணியை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியின் முக்கிய முகமாக உள்ள காங்கிரஸ் கட்சியோடு ஆம் ஆத்மி, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளோடு முரண்பாடு உள்ளது. இந்த சூழலில் தற்போது கரப்பான் ஜனதா கட்சியும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதனை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணிக்கு மாற்றாக கரப்பான் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி, திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட மாநில கட்சிகளை இணைத்து மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கரப்பான் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே சமீபத்தில் சிறந்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு அரவிந்த் ஜெஜ்ரிவால், மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் ஆகியோரை குறிப்பிட்டிருந்தார். இதனால் அவரும் இப்படி ஒரு அணியை உருவாக்குவதில் மும்முரமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மூன்றாவது அணி உருவாக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சுவாமிநாதன் புதிய தலைமுறையிடம் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், திமுகவுக்கு பிரதமர் முகமாக ஒரு முகம் தேவை என்றும், அப்போதுதான் வெற்றிவாய்ப்பு அதிகம் என்றும் கூறினார்.மேலும், இப்படி ஒரு கூட்டணி அமைந்தால் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் முன்னிறுத்தப்படவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

