\
Sanjay Malhotra
Sanjay MalhotraANI

RBI அதிரடி.. ரெப்போ வட்டி 5.5%.. வீடு, கார், Personal Loan EMI எகிறுமா?

குறிப்பாக, ஈரான் போர் காரணமாக உலக வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 5.5 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. இதற்கு முன்பு 5.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி, தற்போது 5.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2023 பிப்ரவரிக்குப் பிறகு ரெப்போ வட்டி உயர்த்தப்படுவது இதுவே முதல்முறையாகும். RBI ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான நிதிக் கொள்கைக் குழு இந்த முடிவை ஒருமனதாக எடுத்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம், எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை வட்டி உயர்வுக்கான முக்கியக் காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. உலகளவில் பணவீக்கம் மேலும் அதிகரிக்கலாம் என்றும், வர்த்தக நிச்சயமற்ற தன்மை தொடர்வதாகவும் RBI தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஈரான் போர் காரணமாக உலக வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை RBI தனது பணம் தொடர்பான கொள்கை நிலைப்பாட்டையும் ’Neutral’ என்பதிலிருந்து ’Calibrated Tightening’ என மாற்றியுள்ளது. இதன்மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்த RBI கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. மேலும், எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரித்தால் மீண்டும் வட்டி உயர்த்தப்படலாம் என்பதற்கான வாய்ப்பையும் இது காட்டுகிறது.

RBI
RBIani

RBI, நடப்பு நிதியாண்டுக்கான Core Inflation கணிப்பை 4.3 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதேநேரத்தில், இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை 6.7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகள் தொடர்ந்து வலுவாக இருப்பதாக RBI தெரிவித்துள்ளது. தனியார் நுகர்வு, முதலீடு மற்றும் உள்நாட்டுத் தேவை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விநியோகச் சங்கிலி பாதிப்பு, பலவீனமான பருவமழை மற்றும் El Niño போன்ற காரணிகள் வளர்ச்சிக்கு சவாலாக இருக்கலாம். ரெப்போ வட்டி உயர்வால் வங்கிகளின் கடன் செலவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களின் வட்டி விகிதங்களிலும் தாக்கம் ஏற்படலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com