மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் - உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பு

மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் - உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பு

மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் - உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிப்பு
Published on

ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களின் பொழுது இருவேறு சமூகத்தினரிடையே மத ரீதியிலான மோதல்கள் நடைபெற்றதை தொடர்ந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்து பல இடங்களில் அது கலவரமாகவும் மாறியது. கடந்த சனிக்கிழமை டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியில் இவ்வாறு ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் காயமடைந்தனர். இதனால் நாடு முழுவதுமே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்தின் பல மூத்த அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, வரும் ரம்ஜான் மற்றும் அக்ஷய திருதி பண்டிகைகள் ஒரே தினத்தில் கொண்டாடப்பட உள்ள நிலையில், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

எந்த மத வழிபாட்டு நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் முறையான அனுமதி இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது என்றும், நிகழ்ச்சியை நடத்தக் கூடிய ஏற்பாட்டாளர்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் நடந்துகொள்வோம் என பிரமாணப் பத்திரம் வழங்க வேண்டும் எனவும் அவர் அதிகாரகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதே போல, புதிய ஒலிப்பெருக்கிகள் எதையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாது என்றும், ஏற்கனவே இருக்கக்கூடிய ஒலிபெருக்கிகள் கூட அடுத்தவர்களுக்கு தொல்லை தராத வண்ணம் ஒலி அளவு இருக்க வேண்டும் எனவும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இதேபோன்ற உத்தரவை இரு தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா அரசு பிறப்பித்திருக்கிறது. இதுபோலவே, கர்நாடகாவிலும் வழிபாட்டுத் தலங்களில் பயன்படுத்தக்கூடிய ஒலிபெருக்கிகளின் ஒலி அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே இருக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com