OPERATION SINDOOR | டிரேடுமார்க்கிற்குப் போட்டி.. வாபஸ் பெற்ற ரிலையனஸ்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதில் 100 பேர் பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில், உலகம் முழுவதும் ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயர் பிரபலமடைந்துள்ளது. இதை வர்த்தகரீதியாகப் பயன்படுத்திக் கொள்ள தனியார் நிறுவனங்களும், தனி நபர்களும் போட்டியிடும் நிலை உருவானது. அந்த வகையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட 4 பேர் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்கு வர்த்தக முத்திரை பதிவு (டிரேட் மார்க்) கோரி, விண்ணப்பம் தாக்கல் செய்தனர். சினிமா, தொலைக்காட்சி தொடர் அல்லது அதுதொடர்பான வர்த்தகச் செயல்பாடுகளுக்காக இந்தப் பெயரை இவர்கள் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், விண்ணப்பத்தைத் திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ”வர்த்தக முத்திரை பதிவைப் பெற, இளநிலை அதிகாரி ஒருவர், அனுமதி இல்லாமல் தவறுதலாக விண்ணப்பித்துவிட்டார். அதனை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நினைத்து ரிலையன்ஸ் குழுமம் பெருமை கொள்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது, பயங்கரவாதத்திற்கு எதிரான நமது ஆயுதப்படைகளின் போராட்டத்தில் சாதனையாக அமைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அரசுக்கும், ஆயதப்படைகளுக்கும் ரிலையன்ஸ் முழு ஆதரவு அளிக்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.