சபரிமலையில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் படி பூஜை! - முன்பதிவு நிறைவு

சபரிமலையில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் படி பூஜை! - முன்பதிவு நிறைவு
சபரிமலையில் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் படி பூஜை! - முன்பதிவு நிறைவு

ஒருவருக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணமுள்ள படி பூஜைக்கு 2037 ஆம் ஆண்டு வரைக்கான முன்பதிவு முடிந்துள்ளது.

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையும் மகரஜோதி தரிசனமும் நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் முதல் "படி பூஜை" மேள தாளம் முழங்க நடந்தது. சன்னிதானத்தின் 18ஆம் படி, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபமேற்றி செய்யப்படும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் இந்த பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சபரிமலை பூஜைகளிலேயே அதிக கட்டணமான ஒருவருக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணமுள்ள இந்த படி பூஜையின் முன்பதிவு வரும் 2037ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.

கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. டிசம்பர் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்த மண்டல பூஜைக்குப் பின் டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தரிசனமும் சபரிமலையில் மகர சங்ரம பூஜையும் நிறைவடைந்தது.

இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலங்களில் தினசரி ஆயிரத்தை நெருங்கும் பக்தர்கள் வீதம், இதுவரை 44 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் முடித்துள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் அவர்களின் தரிசனம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தினசரி மாலை 7 மணிக்கு துவங்கி 7.30 மணி வரை நடக்கும்படி பூஜையை நடத்த முடியவில்லை.

இந்நிலையில் மகர ஜோதி தரிசனத்திற்குப் பின் பக்தர்களின் தரிசன எண்ணிக்கை சற்றே குறைந்ததால், இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தின் முதல் "படி பூஜை" ஞாயிற்றுக்கிழமை மேளதாளம் முழங்க நடந்தது. இதற்காக சபரிமலை 18ம் படி கழுவி சுத்தப்பட்டுத்தப்பட்டு மலர்களாலும், மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டது. ஒவ்வொரு படியிலும் கற்பூர தீபம் ஏற்றி, 18 தேவதைகளையும் ஒவ்வொரு படியிலும் அமர்த்தும் பூஜை நடத்தப்படுவதால், படி பூஜையை காண்போருக்கு சகல ஐஸ்வர்யங்களும், சர்வ பாக்கியங்களும், நலன்களும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் மோகனரு தலைமையில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி அடங்கிய குழுவினர் மந்திரங்கள் சொல்லி மலர்கள் தூவி படி பூஜையை நடத்தினார். மாலை 7.00 மணிக்கு துவங்கிய படி பூஜை 8.00 மணி வரை தினமும் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டது. படி பூஜைக்காக முன்பதிவு செய்து கட்டணம் செலுத்திய திரளான பக்தர்கள் படி பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்தனர். சபரிமலை பூஜைகளிலேயே அதிக கட்டணமான ஒருவருக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணமுள்ள இந்த படி பூஜையின் முன்பதிவு வரும் 2037ஆம் ஆண்டு வரை முடிந்துள்ளது.

படி பூஜைக்காக இன்று முன்பதிவு செய்தால் ஒரு ஐயப்ப பக்தர் இனி 14 ஆண்டுகள் கழித்தே படி பூஜையில் பங்கேற்று தரிசனம் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com