புல்லுமேடு கானகப் பாதையில் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான அனுமதி நேரம் குறைப்பு – காரணம் என்ன?
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
சபரிமலை மகரவிளக்கு பூஜை மஹோத்ஸவத்தை முன்னிட்டு, சத்திரத்தில் இருந்து புல்லுமேடு கானகப் பாதையில் பயணிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், தாமதமான பயணம் காரணமாக பக்தர்களுக்கு பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நுழைவு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி உத்தரவுப்படி தேவஸ்வம் போர்டு சார்பில் சபரிமலையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. தேக்கடி பெரியார் புலிகள் காப்பக மேற்குப் பிரிவு இணை இயக்குநர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை சத்திரத்தில் இருந்து பக்தர்கள் புல்லுமேடு வழியாக சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், புல்லுமேடு வழி சபரிமலை கானகப் பாதை வழி பயணம் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேரம் குறைப்பு இன்று (08.01.25) முதல் அமலுக்கு வரும் என தேவஸ்வம் போர்டு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எருமேலி பெருவழிப் பாதையில், அழுதக்கடவு மற்றும் முக்குழியில் இருந்து பக்தர்களுக்கு அனுமதி நேரம் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை என்பதில் எந்த மாற்றமும் இல்லை என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.