நடைமேம்பாலங்களை சீரமைக்க சச்சின் நிதி ஒதுக்கீடு
மும்பையில் உள்ள ஆபத்தான நடைபாலங்களை சீரமைக்க தனது தொகுதி மேம்பட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி அளித்துள்ளார் சச்சின்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த மாதம் எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணம் மிகவும் மோசமான நிலையில் இருந்த நடைமேம்பாலம்தான் என்று பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து சச்சின் மும்பை புறநகர் ஆட்சியருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் மும்பை எல்பின்ஸ்டோன் நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் பொதுமக்கள் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் இதுபோன்ற துயரமான சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். எனவே, நடைமேம்பாலங்களை சீரமைக்க வடக்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வேக்கு தலா ரூ.1 கோடி ரூபாய் நிதியை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அளிப்பதாக சச்சின் கூறியுள்ளார்.