‘கொரோனாவை விரட்ட அனுமன் சாலிசா பாடுங்கள்’ – பிரக்யா சிங் தாக்கூர் வேண்டுகோள்

‘கொரோனாவை விரட்ட அனுமன் சாலிசா பாடுங்கள்’ – பிரக்யா சிங் தாக்கூர் வேண்டுகோள்
‘கொரோனாவை விரட்ட அனுமன் சாலிசா பாடுங்கள்’ – பிரக்யா சிங் தாக்கூர் வேண்டுகோள்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா,  வரும் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயில் உலகின் மூன்றாவது பெரிய கோயிலாக இருக்கும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி வரை ஹனுமான் சாலிசா மந்திரத்தை ஒரு நாளைக்கு ஐந்து முறை பாராயணம் செய்யுமாறு பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "நாம் அனைவரும் சேர்ந்து, மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு அமைவதற்கும், கொரோனா நோய்த் தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஆன்மீக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒரு நாளைக்கு ஐந்து முறை ஹனுமான் சாலிசா மந்திரத்தை பாராயணம் செய்யுங்கள். ஆகஸ்ட் 5 ஆம் தேதி விளக்குகள் ஏற்றி,  ராமருக்கு வீட்டில் ஆர்த்தி எடுத்து இச்சடங்கை முடிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரக்யா சிங் தாக்கூர் வீடியோ ஒன்றையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், ‘’மத்தியப் பிரதேச அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக போபாலில் ஆகஸ்ட் நான்காம் தேதி வரை வரை ஊரடங்கு விதித்துள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி லாக்டவுன் முடிவடைந்தாலும், ஹனுமான் சாலிசா சடங்கு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முடிவடையும். அப்போது அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் 'பூமி பூஜை'  செய்யப்படும். தீபாவளி போல அந்த நாளைக் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘’ நாடு முழுவதிலுமிருந்து இந்துக்கள் 'ஹனுமான் சாலிசா'வை ஒரே குரலில் ஓதினால், அது நிச்சயமாக வேலை செய்யும். நாம் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடலாம். இதுவே ராமருக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனை" என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com