எம்.பி பதவியிலிருந்து சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி தகுதி நீக்கம்
மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவர் சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு கையெழுத்திட்டார்.
பீகாரில் பாஜகவுடன் திடீரென கூட்டணி வைத்தார் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ் குமார். இதனால் அதிருப்தியடைந்த மூத்த தலைவர் சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோர் கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளதால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இருவரையும் தகுதி நீக்கக் கோரி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாநிலங்களவை தலைவர் ஆர்.சி.பி.சிங், மாநிலங்களவை தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து சட்டப்பிரிவு 10-ன் கீழ் சரத் யாதவ், அலி அன்வர் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்து துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார். இதனை மாநிலங்களவை செயலர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.