“சித்தராமையா சொன்னதால் பதவி விலகினோம்” - அதிருப்தி எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பார்
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் வழிகாட்டுதலின்படியே தாங்கள் ராஜினாமா செய்ததாக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பார் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதத்தில் 12 காங்கிரஸ், 3 மதச்சார்பற்ற எம்.எல்.ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து குமாரசாமியின் ஆட்சி கவிழ்ந்துள்ள நிலையில், மும்பையில் தங்கியிருந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பெங்களூரு திரும்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஒருவரான சிவராம் ஹெப்பார், முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் வழிகட்டுதலின்படியே பைரத்தி பசவராஜ், முனி ரத்னா, சோம சேகர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறியுள்ளார்.
மேலும் தங்களது ராஜினாமாவுக்கும் பாஜகவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும் , அனைவரும் கூடிப்பேசி அடுத்தக் கட்ட நடவடிக்கையைத் தெரிவிப்போம் என்றும் கூறினார். இதனால் சித்தராமையாவின் மீது காங்கிரசும் மஜதவும் கடும் கோபத்தில் உள்ளன. இதுகுறித்து சித்தராமையா கூறும் போது, எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததற்கும் ஆட்சி கவிழ்ந்ததற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் , மக்களுக்கும் கட்சிக்கும் துரோகம் செய்து விட்டு தன் மீது பழி போடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

