மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை; 1,00,000 கோடியில் லாபம் பார்க்கும் எண்ணெய் நிறுவனங்கள்! ஓர் அலசல்

எண்ணெய் நிறுவனங்களுக்கு நடப்பு நிதிஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

3 மடங்கு லாபம் அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமலேயே உள்ளன. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நடப்பு நிதிஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு

இதுதொடர்பாக கிரிசில் என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சர்வதேச சந்தையில் கடந்த நிதி ஆண்டோடு (2022-23) ஒப்பிடுகையில், நடப்பு நிதி ஆண்டில் 30 சதவீதத்துக்கும் அதிகமாக கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்து உள்ளது. ஆனால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு எந்த மாற்றமும் செய்யாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றன. இதனால் நடப்பு நிதி ஆண்டில் எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2022-23ஆம் நிதி ஆண்டில் இது ரூ.33 ஆயிரம் கோடியாக இருந்தது. எனவே நடப்பு நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் மட்டுமே 3 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2017 முதல் 2022ஆம் ஆண்டுவரை எண்ணெய் நிறுவனங்களின் வரிக்கு முந்தைய லாபம் சராசரியாக ரூ.60 ஆயிரம் கோடியாக இருந்தது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு வழிகளில் லாபம் ஈட்டுகின்றன. எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சில்லரை விற்பனை ஆகியவற்றின் லாபம் ஈட்டுகின்றன. கச்சா எண்ணெய்யின் விலை, அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றுடன் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் மொத்த விலையை கழித்தால் வரும் லாபம் எண்ணெய் நிறுவனங்களுடையது. மேலும் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்த பின்பு கிடைக்கும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றை விற்பனை செய்வதன் மூலமும் எண்ணெய் நிறுவனங்கள் லாபம் பெறுகின்றன. இந்த அதிக லாபம் எண்ணெய் நிறுவனங்களுக்கு கடந்த சில நிதி ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட வருமானத்தையும் செலவினங்களையும் ஈடுசெய்ய உதவும்.

இந்த லாபத்துக்கு முக்கியக் காரணம், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பதுதான். குறிப்பாக, பெட்ரோல் விலையை தொடர்ந்து 100 ரூபாய்க்கு அதிகமாக வைத்து விற்கப்பட்டதுதான். ’கடந்தகால காங்கிரஸ் அரசு வாங்கிய 1.34 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் பத்திர கடனால்தான் மத்திய அரசுக்கு பெரும் சுமை ஏற்பட்டுள்ளது என்றும், முந்தைய ஆண்டு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதற்காக விற்பனை விலை குறைக்கப்படவில்லை என்றும் இதனால்தான் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை’ எனவும் பாஜக தலைமையிலான அரசு காரணம் கூறுகிறது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனங்கள் பெட்ரோலை ரூ.10 லாபத்தில் விற்றுவருகின்றன.

பெட்ரோல், டீசல் லாபம் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைக் காரணம் காட்டி கடந்த 2021ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டன. 2022ஆம் ஆண்டு மே மாதம் வரையிலும் இதே நிலை தொடர்ந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்தினால், அதை அவர்களால் தாங்க முடியாது என்பதால் கடந்த ஆண்டு மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் உயர்த்தப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் கூட, கச்சா எண்ணெய் விலை அதிகமாக இருந்த போது எரிபொருள் விலையை உயர்த்தாததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை அவை ஈடு செய்வதற்கு வசதியாக விலைகள் குறைக்கப்படவில்லை.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று பெட்ரோல், டீசல் விலைகளின் உயர்வு ஆகும். இன்றியமையாத பொருட்களின் விலைகள் குறைய வேண்டுமானால், பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் கடந்த காலங்களில் சந்தித்த இழப்பை ஈடு செய்து விட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்காமல் இருப்பது மக்களுக்கு இழைக்கப்படும் இரண்டகம் ஆகும். எனவே, இனியும் தாமதிக்காமல் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தைச் சந்தித்து இருப்பதால், பொதுமக்களும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், சில்லறை விலையைக் குறைக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த ஓராண்டாக கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்றுக்கு 30%க்கு மேல் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. என்றபோதும் உள்நாட்டுச் சந்தையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனை விலையைக் குறைக்கவில்லை.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

அதேநேரத்தில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில் கடந்த 2021 நவம்பர்3ஆம் தேதி 1 லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும் 1 லிட்டர் டீசல் 102.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதான், பெட்ரோல், டீசல் விற்பனையின் உச்சவிலையாக இருந்தது. பின்னர் உத்தரப்பிரதேசம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.

சென்னையில், 2022 மே 21 வரையில் நீண்டநாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு (2022) மே 21ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ’மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும்’ என அறிவித்ததைத் தொடர்ந்து சென்னையில் பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதே விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தொடங்கியது. தற்போது வரை அந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரையடுத்து, உலக அளவில் எண்ணெய் விலை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் விநியோகிக்கும் தொடர் சங்கிலிகளில் சீர்குலைவும் ஏற்பட்டது. அதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு கண்டது. ரஷ்யா - உக்ரைன் போருக்கு இடையே மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கக்கூடாது என தடை விதித்தன.

ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் அதிகளவிலான எண்ணெய் வாங்கி வருகின்றன. இதையடுத்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா முன்னேறியுள்ளது. அதிலும் இந்திய ஆயில் சுத்திரிகரிப்பு நிறுவனங்கள் ஒருநாளைக்கு பல பேரல் அளவிலான கச்சா எண்ணெய்யை, ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் இறக்குமதி செய்துவருகின்றன. இந்தியா, தன்னுடைய கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை சார்ந்துதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com