’ரூ25,000தான் எடுக்கமுடியும்’ : நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி - பின்னணி என்ன?

’ரூ25,000தான் எடுக்கமுடியும்’ : நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி - பின்னணி என்ன?
’ரூ25,000தான் எடுக்கமுடியும்’ : நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி - பின்னணி என்ன?

லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் டிசம்பர் 16 ஆம் தேதி வரை 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கமுடியாது என வங்கியின் நடவடிக்கைகளுக்கு நிதியமைச்சகம் அதிரடி கட்டுப்பாடு விதித்துள்ளது.

தொடரும் வாராக்கடன் பிரச்னைகள்:

இந்தியாவில் உள்ள வங்கிகள் வாராக்கடன் பிரச்னையில் சிக்குவது தற்போது தொடர் கதையாகிவிட்டது. அந்தப் பட்டியலில் தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியும் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. கரூரை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த வங்கி, தமிழகத்துக்கு வெளியே ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மும்பை, டெல்லி, கொல்கத்தா, குஜராத், மத்தியப் பிரதேசம் என தற்போது மொத்தம் 19 மாநிலங்களில் 569 கிளைகள், 1,046 ஏடிஎம்கள் மற்றும் 7 விரிவாக்கக் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இந்த வங்கி கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு மட்டுமே கடன் வழங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மி விலாஸ் வங்கி எப்போது பெரிய பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஆரம்பித்ததோ அப்போதிலிருந்துதான் அந்த வங்கிக்கு பிரச்னை ஆரம்பமானதாக கூறப்படுகிறது. பெரிய பெரிய நிறுவனங்கள் தாங்கள் பெற்ற கடனை திரும்ப செலுத்தாததால் வாராக் கடன் அளவு அதிகரித்தது. இதுதான் இந்த வங்கியில் தற்போதைய நிலைக்கு காரணமாக அமைந்தது.

இந்த வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை டிசம்பர் 16ஆம் தேதி வரை தொடரும் என நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு காரணமாக, பெரும் நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வங்கியில், இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மட்டும் 397 கோடி ரூபாய் கூடுதல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஏற்பட்ட நஷ்டத்தால் தொடர்ந்து நிர்வகிக்க முடியவில்லை என்றும் அரசு கருத்து தெரிவித்துள்ளது.

லக்ஷ்மி விலாஸ் வங்கியில் என்ன நடந்தது?

அதிக அளவிலான வாராக் கடன் மற்றும் போதிய நிதி மூலதனமின்மை போன்ற காரணங்களினால் லக்ஷ்மி விலாஸ் வங்கியை, பிசிஏ என்றழைக்கப்படும் ‘அவசர திருத்த நடவடிக்கை’யின்கீழ் ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் கொண்டுவந்தது. ரெலிகேர் நிறுவனம் அளித்த முறைகேடு புகாரின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரெலிகேர் நிறுவன்ம் செலுத்திய ரூ.790 கோடியை முறைகேடாக ரான்பாக்ஸி நிறுவனத்தின் தலைவர்களான சிங் சகோதரர்களுக்கு வழங்கினார்கள் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு.

வரைமுறையின்றி வழங்கப்பட்ட கடன்கள் திருப்பி செலுத்தப்படாமல் போயின. 2017 கால கட்டத்தில் 2.67 சதவிகிதமாக இருந்த லக்ஷ்மி விலாஸ் வங்கியின் வாராக் கடன் (NPA),மார்ச் 2020ல் 25.39 சதவிகிதமாக அதிகரித்தது. வங்கியின் நிரந்தர வைப்பு நிதி (fixed deposit) 31,000 கோடி ரூபாயில் இருந்து 15,143 கோடி ரூபாயாகச் சரிந்தது. வங்கியின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள் வங்கி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதன் காரணமாக வங்கி இத்தகையதொரு சரிவை எதிர்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவசர திருத்த நடவடிக்கையால் வங்கியின் அன்றாட செயல்பாடுகள் எதுவும் பாதிப்புக்கு உள்ளாகாது. குறிப்பாக வைப்புத் தொகை பெறுதல், வழங்குதல் போன்ற செயல்பாடுகள் வழக்கமாக நடைபெறும். ஆனால், ஒவ்வொரு மாத செயல்பாடுகளை லக்ஷ்மி விலாஸ் வங்கி மாதாந்திர அடிப்படையில் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கையின்கீழ் உள்ள வங்கிகள், பிற நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் அளிக்கமுடியாது. கடன் அளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

அதேபோல் புதிய கிளைகள் எதுவும் தொடங்கமுடியாது. வங்கிகளில் நிதி ஆதாரம் முறையான அளவில் இல்லாதபோதும், அதன் வாராக் கடன்களின் அளவு அதிகரிக்கும்போதும் அந்த வங்கிகளை முறைப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி அவற்றை தனது கண்காணிப்பில் கொண்டு வந்து திருத்த நடவடிக்கை எடுப்பது வழக்கம். இந்நிலையில் அந்தக் கட்டுப்பாடு தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியின்மீது கொண்டு வரப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி

இந்நிலையில், தற்போது மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையானது லக்ஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென மூடிவிட்டால் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இழக்கநேரிடும். எனவே அதற்கு முதல்கட்டமாக வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வங்கி நிலை மோசமாக இருப்பதை அறிந்த வாடிக்கையாளர்கள் தங்கள் அனைத்து பணத்தையும் எடுக்கும்போது வங்கி திவாலாகிவிடும். எனவே இந்த வங்கியில் எவ்வளவு கணக்குகள் வைத்திருந்தாலும், ஒரு வாடிக்கையாளரால் ஒரு மாதத்தில் ரூ.25 ஆயிரத்துக்கும்மேல் எடுக்கமுடியாது. இந்த கட்டுப்பாடு நவம்பர் 17ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 16ஆம் தேதிவரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், மருத்துவம், கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக அனுமதி பெற்று கூடுதல் தொகையை எடுக்க முடியும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த சமயத்தில் லக்ஷ்மி விலாஸ் வங்கியை வேறு பெரிய வலுவான வங்கியுடன் இணைக்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. அப்படி இணைந்துவிட்டால், வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாகிவிடும். அதற்கான வாய்ப்புகள் கிடைக்காத பட்சத்தில், புதிய முதலீட்டாளர்கள் உதவ முன்வந்தால், அவர்களின் நம்பகத்தன்மையை உறுதிசெய்த பிறகு அவர்களை இணைக்கலாம் என மத்திய நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து ஒரு மாதத்திற்குள் இந்த வங்கியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. எனவேதான், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுப்பதற்கு ஒருமாத காலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com