கடன்களைத் திருப்பித் தர தயாராக இருப்பதாக தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் பணம் பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பிச் சென்றுள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்காக இந்திய அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை தற்போது லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வந்து மும்பை சிறையில் வைத்து விசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பிரிட்டன் மனித உரிமைகள் ஆணையம் வரையறையின் படி, மும்பை சிறை இருக்கிறதா என்பது குறித்து நீதிபதி விசாரித்து வருகிறார். இதற்காக இந்திய அதிகாரிகள் சமர்பித்துள்ள மும்பை சிறை வீடியோவை லண்டன் நீதிபதி ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், தனது 13 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்று கடனை திருப்பித்தர தயாராக இருப்பதாகவும், அதற்காக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜூன் மாதம் மனு தாக்கல் செய்திருப்பதாகவும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்காக லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜராகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.