”ரோடே இல்ல எப்படி பொண்ணு கொடுக்குறது?” - இந்தியாவின் பேச்சுலர் கிராமங்கள் பற்றி தெரியுமா?

”ரோடே இல்ல எப்படி பொண்ணு கொடுக்குறது?” - இந்தியாவின் பேச்சுலர் கிராமங்கள் பற்றி தெரியுமா?
”ரோடே இல்ல எப்படி பொண்ணு கொடுக்குறது?” - இந்தியாவின் பேச்சுலர் கிராமங்கள் பற்றி தெரியுமா?

தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள், ரோடு போடுறேன், வீடு கட்டித்தரேன், தண்ணீர் வசதி கொடுக்கிறேன் என பல நல்ல நல்ல திட்டங்களை செய்வதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, “காரியம் ஆனதும் காலை பிடிப்பதும், முடிந்ததும் கழுத்தை பிடிப்பதும்” என்ற சொல்லாடலை போல தேர்தலுக்கு யாரோ எவரோ என தலையை திருப்பிக்கொண்டு செல்வார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் சென்று அடிப்படை வசதி வேண்டி கூக்குரலிட்டு மக்கள் முறையிட்டாலும் எதுவும் தேராது என்பது போலவே வெறும் கையோடு வீடு திரும்புவார்கள். ஆனால் ருசிகண்ட பூனை சும்மா விடுமா என்கிற பாணியிலும் நான் வாக்குறுதிகளை கொடுத்தே பழகிட்டே அவங்க ஓட்டு போட்டே பழகிட்டாங்க என்பது போலவும் நாடு முழுவதும் இப்படியான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில், நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரையிலும் இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான பீகாரில் உள்ள நான்கு குறிப்பிட்ட கிராமங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் அங்குள் ஆண்களுக்கு திருமணமே ஆகவில்லை என்ற பரபரப்பு தகவல் ஒன்றை செய்தி நிறுவனம் ஒன்று களத்தில் சென்று செய்தி சேகரித்திருக்கிறது.

அதன்படி, பீகாரின் லக்கிசராய் என்ற மாவட்டத்தில் உள்ள 4 கிராமங்கள்தான் பதுவா, கன்ஹாய்பூர், பிபரியா திஹ் மற்றும் பசௌனா. இந்த நான்கு கிராமங்களில் சாலை வசதியே ஏற்படுத்தாமல் இருப்பதால் இங்கு வசிக்கும் ஆண்களுக்கு பெண் கொடுக்க மற்ற மாவட்ட மக்கள் தயங்குகிறார்களாம்.

இதுகுறித்து அரசு நிர்வாகிகள் கவனத்துக்கு கொண்டு சென்றீர்களா என கேட்கப்பட்டதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர், மாநில முதலமைச்சர் என அனைத்து தரப்புக்கும் சென்று மன்றாடிவிட்டோம். ஆனால் எவருமே செவி சாய்க்கவில்லை என கடும் வருத்தத்தோடு தெரிவித்திருக்கிறார்கள் பதுவா கிராமத்தினர்.

மேலும், “சாலை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் எவரும் எங்களுக்கு திருமணம் செய்து வைக்க பெண் கொடுக்கவும் முன்வருவதில்லை. மருத்துவ தேவை உள்ள போது இந்த மோசமான சாலைகளால் அவசர உதவிக்கு வெளியூர் கூட செல்லமுடியாமல் போகிறது. இதனால் பலரும் உயிரிழக்கவே செய்கிறார்கள்.” என புலம்பித் தள்ளியிருக்கிறார்கள்.

அடுத்ததாக பேசிய மற்றொரு நபர், “30 வயதாகியும் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. என்னை போல 30 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பலருக்கும் திருமணமாகவில்லை” என உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். சாலை வசதி அமைத்து தராததால் சமூக வாழ்க்கையோடு சேர்த்து தனிப்பட்ட வாழ்க்கையையும் இழந்து நிற்கும் பீகாரின் இந்த நான்கு கிராம மக்களுக்கு என்றுதான் சுதந்திரம் கிடைக்குமோ என ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com