பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை தயாரிக்கும் பணியில் RBI ? ரிசர்வ் வங்கியின் புதிய திட்டம்!!
இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாக, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான நோட்டுகளை சோதனை அடிப்படையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பிரிவான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரண் நிறுவனம்(BRBNMPL), பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிக்கத் தேவையான பாலிமர் மூலக்கூறு தாள்களை வழங்குமாறு உலகளாவிய நிறுவனங்களை அழைக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 18 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
அதேசமயம், இந்தத் திட்டத்தில் கீழ், முதற்கட்டமாக, ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இந்த சோதனை வெற்றிகரமாக இருந்தால், பின்னர் மற்ற மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கும் இந்த தொழில்நுட்பம் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், இந்த நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தாலும், பழைய காகித வடிவிலான ரூபாய் நோட்டுக்களும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களுக்கு இணையாக புழக்கத்தில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது, பயன்படுத்தப்பட்டு வரும் காகித ரூபாய் ரூபாய் நோட்டுக்கள் எளிதில் கிழிந்து விடக்கூடியதாகவும், சேதமடைந்துவிடக்கூடியதாகவும் இருக்கின்றன. அதேசமயம், பிளாஸ்டிக் ரூபாய் பாலிமர் நோட்டுகள் சாதாரண காகித நோட்டுகளை விட பல மடங்கு நீண்ட காலம் பயன்படுத்தக்கூடியவை. தண்ணீரில் நனைந்தாலும் எளிதில் சேதமடையாது. கிழிவது, அழுக்காக மாறுவது போன்ற பிரச்சினைகளும் குறையும். அதுமட்டுமல்லாமல், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறுவதால் கள்ளநோட்டுகளைத் தடுப்பதிலும் இவை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1988-ல் ஆஸ்திரேலியாவால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பணத்தாள்கள் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இப்போது, அந்த வரிசையில் இந்தியாவும் இணைய தயாராகி வருகிறது. எனினும், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் எந்த தேதியில் புழக்கத்திற்கு வரும் என்பது குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை இறுதி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

