வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி - ஏற்படப்போகும் தாக்கம் என்ன?

வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி - ஏற்படப்போகும் தாக்கம் என்ன?

வட்டி விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி - ஏற்படப்போகும் தாக்கம் என்ன?
Published on

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் அதிகரித்துள்ளது. இதனால் கடன்களுக்கான வட்டி அரை சதவிகிதம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

நாட்டின் பணவீக்கம், கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி உச்சவரம்பான 6%-ஐ மீறியுள்ளது. "ரெப்போ ரேட்" என்பது ரிசர்வ் வங்கி எந்த வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு கடன் அளிக்கும் என்பதை குறிப்பதாகும். இந்த வட்டி விகிதம் உயர்ந்தால், வங்கிகளிடம் கடன் பெறுவதற்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் என்பது நடைமுறை. இந்த முக்கிய வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 4% இல் இருந்து 4.40% ஆக உயர்த்தியுள்ளது.

இதனால் வீடு, வாகனங்கள், பொருட்கள் வாங்குவதற்கான வட்டி விகிதம் அரை விழுக்காடு வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த CRR, 50 புள்ளிகள் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார். வங்கிகள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்கும்போது ரிசர்வ் வங்கியிடம் கட்டாயமாக வைக்க வேண்டிய இருப்பு நிதி CRR அல்லது "கேஷ் ரிசர்வ் ரேஷியோ" என அழைக்கப்படுகிறது.

CRR அதிகரிப்பால் பணப்புழக்கம் 87,000 கோடி ரூபாய் குறையும் என வங்கி அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். CRR 4 விழுக்காட்டில் இருந்து 4.5 விழுக்காடாக அதிகரிக்கப்படுகிறது எனவும், இது மே 21 முதல் அமலுக்கு வரும் எனவும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது. அமெரிக்காவிலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சென்செக்ஸ் 1,306 புள்ளிகளும் நிஃப்டி 391 புள்ளிகளும் சரிந்தன.

வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ள நிலையில், வீட்டுக்கடன் தவணையும் உயர உள்ளது. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய ஒருவர் எவ்வளவு தொகையை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும் என்பதை உத்தேசமாக இப்போது பார்க்கலாம்.

வங்கிகள் கடன் வட்டியை உயர்த்த உள்ள நிலையில், அதில் இரு தேர்வுகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும். மாதாந்திர தவணையை உயர்த்தாமல் கடன் தவணை காலத்தை நீட்டிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இதனால் நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட ஒரு சில மாதங்கள் கூடுதலாக கடன் தவணை செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த வாய்ப்பு வேண்டாம் என்றால் மாதாந்திர கடன் தவணை தொகை அதிகரிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம். தற்போது வங்கிகளில் வீட்டுக் கடன் விகிதம் சுமார் 6.75% ஆக உள்ளது. இது இனி சுமார் 7.25% ஆக உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் 15 ஆண்டுகளில் திரும்ப செலுத்தத்தக்க வகையில் 25 லட்சம் ரூபாய் கடன் வாங்கியவர்களுக்கான மாத தவணை 22 ஆயிரத்து 123 ரூபாயிலிருந்து 22 ஆயிரத்து 822 ரூபாயாக உயரும்.

50 லட்சம் ரூபாய் கடன் வாங்கியவர்களுக்கு மாத தவணை 44 ஆயிரத்து 245 ரூபாயிலிருந்து 45 ஆயிரத்து 643 ரூபாயாக அதிகரிக்கும். 20 ஆண்டு கடன் வரம்பில் 25 லட்சம் ரூபாய் தொகைக்கு மாத தவணை 19 ஆயிரத்து 9 ரூபாயில் இருந்து 19 ஆயிரத்து 759 ரூபாயாக உயரும். 50 லட்சம் ரூபாய் கடனுக்கு மாத தவணை 38 ஆயிரத்து 18 ரூபாயிலிருந்து 39 ஆயிரத்து 519 ரூபாயாக உயரும். கடன் தவணை காலம் 25 ஆண்டுகளாகவும் கடன் தொகை 25 லட்சம் ரூபாயாகவும் இருக்கும் பட்சத்தில் மாத தவணை 17,273 ரூபாயிலிருந்து 18,070 ரூபாயாக அதிகரிக்கும்.

50 லட்சம் ரூபாய் கடன் தொகைக்கு மாதாந்திர தவணை 34 ஆயிரத்து 546 ரூபாயிலிருந்து 36 ஆயிரத்து 140 ரூபாயாக அதிகரிக்கும். தங்கள் வங்கியின் கடன் வட்டி அதிகம் என கருதுபவர்கள் வட்டி குறைவாக உள்ள வேறு ஒரு வங்கிக்கும் தங்கள் கடனை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கிக் கடன் வட்டி உயர உள்ள நிலையில், டெபாசிட்டுகளுக்கான வட்டியும் உயரும். இதனால் வங்கி, அஞ்சலக சேமிப்புகளுக்கான வட்டி சற்று உயரும் வாய்ப்பு

ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com