ATMகளில் ரூ.100, ரூ.200 நோட்டுகள் அதிகம் வைக்க உத்தரவு.. திரும்பப் பெறப்படுகிறதா ரூ.500?
2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் அடித்தட்டு மக்கள் பெரும் அவஸ்தையைச் சந்தித்தனர். இதற்கிடையே, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதை மாற்றுவதற்கும் மக்கள் சிரமப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. தவிர, பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இதனால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் இன்னும் மிகக்குறைந்த அளவிலான பணம் மட்டுமே வங்கிக்கு திரும்ப வராமல் உள்ளது. இதற்கிடையே, கறுப்புப் பணம் அதிகரித்ததால்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ரூ.500 கள்ள நோட்டுப் புழக்கம் 36 சதவீதம் அதிகரித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் அதிகபட்ச மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டாக 500 இருக்கிறது. இந்த நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்களிலும் 75 சதவீதம் வரை 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும், அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் 90% வரை 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை வைக்கவும் ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கி உள்ளது. பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் குறைந்த மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் தேவையான அளவு புழக்கத்தில் இருப்பதை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே, கள்ள நோட்டுகளை ஒழிக்கும்வகையில், ரூ.500 நோட்டு பணமதிப்பிழப்பு செய்யப்படுமா என்ற கேள்வி மக்களிடைய எழுந்துள்ளது. முன்னதாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ”இப்போதுகூட 500 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க வேண்டும்” என்று பிரதமரிடம் கூறியிருப்பதாகத் தெரிவித்தார். அவருடைய பேட்டியை தொடர்ந்து, பண மதிப்பிழப்பு தொடர்பாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ரூ.500 நோட்டுகள் தொடர்பாக எந்த அறிக்கையையும் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. ஆகையால், ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். தொடர்ந்து பயன்பாட்டிலும் இருக்கும்.