சித்துவுக்கு ஆதரவாக புதிய பெண் அமைச்சர் ராஜினாமா - பஞ்சாப் அரசியலில் நீடிக்கும் குழப்பம்

சித்துவுக்கு ஆதரவாக புதிய பெண் அமைச்சர் ராஜினாமா - பஞ்சாப் அரசியலில் நீடிக்கும் குழப்பம்

சித்துவுக்கு ஆதரவாக புதிய பெண் அமைச்சர் ராஜினாமா - பஞ்சாப் அரசியலில் நீடிக்கும் குழப்பம்
Published on

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா செய்த நிலையில், அம்மாநில அமைச்சர் ரஜியா சுல்தானா ராஜினாமா செய்துள்ளார்.

பஞ்சாபில் மாநில காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் பொறுப்பேற்றது முதல், முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவருக்கும் இடையே பிரச்னை நீடித்தது. ஒரு கட்டத்தில் கட்சியில் தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனக் கூறி முதலமைச்சர் பதவியில் இருந்து அமரிந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதலமைச்சராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் நியமிக்கப்பட்டார்.

அமரிந்தர் சிங் பதவி விலகியதில் இருந்து நவ்ஜோத் சிங் மீது கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வந்தார். சித்துவை தேர்தலில் வேட்பாளராக அறிவித்தால், அவரை தோற்கடிப்பேன் என்றும் சித்து பாகிஸ்தானுடன் தொடர்புள்ள தேசவிரோதி என்றும் அமரிந்தர் காட்டமாக தெரிவித்தார்.

கட்சியில் நீண்ட நெடுங்காலமாக பணியாற்றி வரும் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததற்கு நவ்ஜோத் சிங் சித்து தான் காரணம் என்ற விமர்சனமும் சித்து மீது எழுந்தது. இதனையடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து, அதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு, சித்து அனுப்பி வைத்துள்ளார். அதில் பஞ்சாப் காங்கிரஸ் மற்றும் பொதுமக்களின் நலனில் எந்த சமரசத்திற்கும் இடம் தரக்கூடாது என்பதற்காக ராஜினாமா முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதே நேரம் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் பணியாற்றப் போவதாகவும் சித்து தெரிவித்துள்ளார். இதற்கிடையே சித்து ஸ்திரமான மனிதர் இல்லை என்றும், எல்லையோர மாநிலமான பஞ்சாபுக்கு பொருந்தாத தலைவராக இருப்பார் என்றும் ஏற்கெனவே தாம் தெரிவித்திருந்ததாக அமரிந்தர் சிங் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சித்துவின் ராஜினாமாவைத்தொடர்ந்து அவரது ஆதரவாளரான பஞ்சாபில் முதல்வர் சரண்ஜித் சிங் அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் ரஜியா சுல்தானாவும் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாபில் அமரிந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அங்கு அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com