"மோடியும், அமித் ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல" - சஞ்சய் ராவத்
நரேந்திர மோடியும், அமித் ஷாவும் வெல்ல முடியாதவர்கள் அல்ல என்பதை டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருப்பதாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ள ராவத், மதத்தை மையமாக வைத்து பாரதிய ஜனதா அமைத்த வியூகம் தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்துள்ளார். அதேவேளையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தியதாக ராவத் பாராட்டியிருக்கிறார்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெல்ல முடியாத கட்சியாக இருந்த பாரதிய ஜனதா, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அட்டை வீடுகளைப் போன்று சரிந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லி தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்காதவர்கள் தேசத்துரோகிகள் என்று கூறிய அக்கட்சியின் தலைவர்கள், தற்போது அம்மாநில மக்கள் அனைவரையும் அவ்வாறு முத்திரை குத்துவார்களா? என ராவத் வினவியிருக்கிறார். எந்தவொரு நாடும் மதமில்லாமல் இல்லை என்ற போதிலும், மதம்தான் தேசப்பற்று என்பது பொருளல்ல எனவும் சஞ்சய் ராவத் சாடியுள்ளார்.