மருத்துவமனையில் இருந்த உடலை கடித்து சேதப்படுத்திய எலிகள்.. உறவினர்கள் போராட்டம்!
மருத்துவமனையில் உயிரிழந்த ராணுவ அதிகாரி மனைவியின் உடலை எலிகள் கடித்து சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
சண்டிகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சிங் சண்டோக். இவரது மனைவி ஜோஸ்சோட் கார், மாரடைப்பு காரணமாக பஞ்சாபில் உள்ள இந்துஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர் மருத்துவமனை விதிப்படி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் மருத்துவமனை நடைமுறைகளை முடித்துவிட்டு உடலை பெற இறந்தவரின் மகள் பிணவறைக்கு சென்றுள்ளார்.
ஜோஸ்சோட் முகத்திலும், காதிலும் காயங்கள் இருப்பது தெரிந்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் முறையாக விளக்கம் அளிக்கவில்லை. உடனடியாக தன்னுடைய தந்தைக்கு போன் செய்த அவர், உடலை எலிகள் கடித்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் அனைவரும் மருத்துவமனை வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிணவறையில் உள்ள எலிகள் இறந்தவர்களின் உடலைகடித்து சேதப்படுத்தியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர்.
உடனடியாக மருத்துவமனை வளாகத்திற்கு வந்த காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது. இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது