உடல்நலம் குன்றிய முன்னாள் ஊழியரின் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்த ரத்தன் டாடா!
உடல்நலம் குன்றிய முன்னாள் ஊழியரின் வீட்டுக்கு நேரில் சென்று நலம் விசாரித்த ரதன் டாடாவை இணையத்தில் பலரும் புகழ்ந்து வருகின்றனர்
ஜாதி, மதம், இனம், மொழி, நாடு என ஒவ்வொருவரும் பிரிந்து கிடந்தாலும் மனிதம் என்ற ஒற்றை சொல் எல்லோரையும் இணைத்து விடுகிறது. அதுவும் கடந்த 2020இல் உலகமே முடங்கி கிடந்த போது மனிதம் தழைத்து ஓங்கியதை அடுத்தவருக்கு உதவும் உள்ளங்களை பார்த்த போது அறிந்து கொள்ளவும் முடிந்தது. இந்தியாவின் முன்னணி பிசினஸ் ஐகானான ரத்தன் டாடா அண்மையில் தன்னிடம் வேலை பார்த்த, உடல்நலம் குன்றிய முன்னாள் ஊழியரின் வீட்டுக்கே நேரில் சென்று அவரிடம் நலம் விசாரித்துள்ளார்.
அதற்காக மும்பையிலிருந்து பூனே - பிரெண்ட்ஸ் சொசைட்டியில் உள்ள அந்த ஊழியரின் வீட்டுக்கு கார் மூலம் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் 83 வயதான ரத்தன் டாடா. அந்த ஊழியர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலம் குன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பை யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாகவே வைத்திருந்துள்ளார் ரத்தன் டாடா. தற்போது அது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரதன் டாடாவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளை ரத்தன் டாடா செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.